பாஜகவிற்கு தான் பாகிஸ்தான் எதிரி நாடு எங்களுக்கு அண்டை நாடுதான் என கர்நாடக காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் நான்கு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளது. நான்கு இடத்திற்கு காங்கிரஸ் சார்பில் மூன்று பேரும், பாரதிய ஜனதா கட்சி மற்றும்- மதச்சார்பற்ற ஐக்கிய தளம் சார்பில் இருவரும் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது.
காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் சயீத் நசீர் ஹுசைன். இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சட்டமன்ற வளாகத்தில் அவர்களுடைய ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பினர். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக புகார் அளிக்க வேண்டும் என வற்புறுத்தினர். மேலும், கோஷம் எழுப்பியதற்கான ஆடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.
இது தொடர்பான விவாதத்தில் பேசிய பி.கே.ஹரிபிரசாத், ‘‘பாஜகவை பொறுத்தவரை பாகிஸ்தான் எதிரி நாடாக இருக்கலாம், ஆனால் எங்களை பொறுத்தவரை பாகிஸ்தான் அண்டை நாடுதான்” என்று கூறினார்..
இந்தியாவுக்கு எதிராக நான்கு முறை போர் நடத்திய பாகிஸ்தானை ‘‘எதிரி தேசம்’’ என்று காங்கிரஸ் கட்சி கூறவில்லை. ஆகையால் தேச விரோதமாக காங்கிரஸ் கட்சி நடந்து கொண்டுள்ளது என்று பாஜக விமர்சித்துள்ளது.