பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய பங்கு உள்ளதாக சந்தேகப்படும் நபரை தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு புரூக் பீல்டில் உள்ள பிரபலமான, ‛ராமேஸ்வரம் கபே’ உணவகத்தில் கடந்த 1ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு விசாரணையை கையில் எடுத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 500க்கும் அதிகமான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் குண்டு வைத்து விட்டு அரசுப் பேருந்தில் பயணம் செய்த வீடியோவும், தும்கூரு வழியாக பல்லாரி சென்ற வீடியோவும் வெளியானது. இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய பங்கு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷபீர் என்றழைக்கப்படும் அவர் குண்டு வைத்து விட்டுச் சென்ற மர்ம நபரின் கூட்டாளியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் என்.ஐ.ஏ., கைது செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.