பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பேரணிக்கு கோவை காவல்துறை அனுமதி வழங்க, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மார்ச் 18ம் தேதி 4 கிலோ மீட்டருக்கு தொலைவிற்கு பேரணி நடத்த பா.ஜ.க., திட்டமிட்டது. இதில் பிரதமர் மோடி மக்களை சந்திக்கிறார். வழி நெடுகிலும் பொதுமக்கள், மாணவர்கள், தொண்டர்கள் என பலரும் பங்கேற்று பிரதமர் மோடியை மலர்தூவி வரவேற்பதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது. காரணம், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக திமுக அரசின் காவல் துறை தெரிவித்தது.
திமுக அரசின் காவல்துறையின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று (மார்ச் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜக சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பால் கனகராஜ், நாடு முழுவதும் பிரதமர் பேரணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த காவல்துறை வழக்கறிஞர் கபிலன், கோவை பதட்டமான பகுதி என்பதாலும், மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுவதாலும் அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறித்து, சிறப்பு குழு பார்த்துக் கொள்ளும் எனவே கோவை காவல்துறை பேரணிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் திமுக அரசின் முகத்திரை கிழிந்துள்ளது என பாஜகவினர் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு பாஜகவினர் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.