தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் இந்த ஆதரவை கண்டு, தி.மு.க.,வுக்கு தூக்கம் தொலைந்து விட்டது என சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று (மார்ச் 19) சேலம் மாவட்டம் தாமரைத் திடல், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் எட்டு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக உரையாற்றினார்.
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் மதியம் 1:00 மணிக்கு அங்குள்ள மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட ஜீப்பில் கூட்ட மேடைக்கு வந்தார். கோவையை போலவே இங்கும் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் வந்தனர். வழி நெடுகிலும் தொண்டர்கள் மலர் தூவியும், ‘மோடி…மோடி…’ என கோஷமிட்டும் வரவேற்றனர்.
அதன் பின்னர் மேடைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் வரவேற்றனர். அப்போது பிரதமர் பேசியதாவது:
கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ள புண்யபூமியான சேலத்தில் பேசுவதில் பெருமை கொள்கிறேன். தற்போது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்கும் ஆதரவை, இந்தியாவே உற்றுப் பார்க்கிறது.
நேற்று கோவையில் ஜன சமுத்திரத்தில் நீந்தி வந்தேன். இன்று சேலத்தில் உங்கள் அன்பில் திளைக்கிறேன். பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக்கு கிடைக்கும் இந்த ஆதரவை கண்டு, தி.மு.க.,வுக்கு தூக்கம் தொலைந்து விட்டது.
இம்முறை, 400க்கு மேலான எம்.பி.,க்களை நமக்குத் தர நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஏப்ரல் 19ல் உங்கள் ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ.க., கூட்டணிக்கு விழ வேண்டும்.
வளர்ச்சியான தமிழகம், வளர்ச்சியான இந்தியா, நவீன கட்டமைப்பு, பெரிய பொருளாதாரம், தன்னிறைவான பாரதம் கிடைக்க, 400 சீட்டுகளை தாண்ட வேண்டும்.
தமிழகத்தில் நாம் வலுவான கூட்டணி அமைக்க பா.ம.க., துணை வந்துள்ளது. ராமதாஸ், அன்புமணியின் ஆற்றல், தொலைநோக்கு நமக்கு அதிக உத்வேகம் அளிக்கிறது.
சேலம் என்றாலே பல நினைவுகள் வருகின்றன, 40 ஆண்டுகளுக்கு முன், கைலாஷ் மானஷரோவர் செல்லும்போது குழுவில் இருந்த ரத்னவேல் என்பவர், எனக்கு சேலத்தின் பெருமைகளை கூறி வந்தார்.
அவர் தற்போது நம்முடன் இல்லை. சேலத்தைச் சேர்ந்த லட்சுமணன், தமிழகத்தில் பாஜக காலூன்ற முக்கிய தலைவராக இருந்தார். இவையெல்லாம் விட அதிகம் நிற்பவர் ஆடிட்டர் ரமேஷ். அவர் உயிரையே தியாகம் செய்து, கட்சியை வளர்த்தார். நேர்மையான அவரை, சமூக விரோதிகள் கொலை செய்தனர் என்று பேசும்போது கண்கலங்கினார். அப்போது தொண்டர்கள் மோடி, மோடி என்று பலத்த கோஷங்கள் எழுப்பினர். ஒரு சில நிமிடம் கழித்து மீண்டும் பிரதமர் பேசத்தொடங்கினார்.
தேர்தல் பிரச்சாரம் வேகம் எடுத்துள்ளது. இ.ண்.டி. கூட்டணியின் எண்ணம் என்ன என்பது, மும்பையில் நடந்த அதன் முதல் பேரணியில் தெரிந்து விட்டது. நாமெல்லாம் அன்றாடம் வழிபடும் சக்தியை அழிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இங்குள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில், ‘ஓம் சக்தி’ என எழுதியுள்ளனர். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, கன்னியாகுமரி சக்தி பீடம், சமயபுரம் மாரியம்மன் என மகத்தான பெண் தெய்வங்களை நாம் சக்தியாக வணங்கி வருகிறோம். அந்த சக்தியை அழிக்க விரும்பும் இ.ண்.டி. கூட்டணியை விட்டு வைக்கலாமா?
ஹிந்து மதம் வேறு எந்த மதத்தையும் நிந்திப்பது கிடையாது. ஆனால் இ.ண்.டி. கூட்டணி ஹிந்து மதத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறது.
அதற்கான கருத்தியலை திட்டமிட்டு உருவாக்குகின்றனர். மற்ற மதத்தை எதுவும் சொல்லாத அவர்கள் ஹிந்து மதத்தை எல்லா நேரமும் இழிவுபடுத்தவோ, கேலி செய்யவோ தவறுவதில்லை. தமிழகத்தில் இருந்து சைவ ஆதீனம் ஆசி பெற்ற செங்கோலை பார்லிமென்டில் நிறுவ அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.
சக்தியை அழிக்க நினைப்பவர்கள் தான் அழியப்போகின்றனர். பெண்களை சக்தி வடிவில் வணங்கினார் மகாகவி பாரதி. நானும் சக்தி உபாசகன் தான்.
சக்தியின் அடையாளங்களை யார் யாரெல்லாம் அழிக்க நினைக்கின்றனரோ, அவர்களை எல்லாம் ஏப்ரல் 19ல் இல்லாமல் ஆக்குவோம் என்ற உத்தரவாதத்தை, தமிழகம் அளித்துள்ளது.
பெண்களின் பிரச்னைகளை தீர்க்க அவர்களின் பாதுகாப்பு கேடயமாக நான் பணிபுரிகிறேன். சமையல் காஸ் வழங்கும் உஜ்வாலா திட்டம், இலவச சிகிச்சை, இலவச ரேஷன், வீடுதோறும் குடிநீர், முத்ரா கடன் என பல திட்டங்கள். முத்ரா கடனில் தமிழகம் தான் முன்னிலையில் உள்ளது.
குறிப்பாக பெண்கள் அதிகம் பயன் அடைந்துள்ளனர். இதனால் பெண்கள், பா.ஜ.க.,வின் கவசமாக உள்ளனர். இன்னும் பல திட்டங்கள் அவர்களைத் தேடி வரும். இது மோடியின் உத்தரவாதம்.
இ.ண்.டி. கூட்டணி பெண்களை கேவலப்படுத்தி வருவதற்கு தமிழகம் தான் சாட்சி. ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார்கள்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பெண்களுக்கு எதிரான குற்றம், தமிழகத்தில் மலிந்துள்ளது. ஏப்ரல் 19ல் நீங்கள் வழங்கும் தீர்ப்பு, தி.மு.க.,வுக்கு பாடமாக இருக்க வேண்டும்.
ஊழல், குடும்ப ஆட்சி ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் உள்ளது போல் காங்கிரஸ் – தி.மு.க.,வுக்கு ஊழல், குடும்ப ஆட்சி என இரு பக்கம் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகன்ற பின்தான் ‘5ஜி’ வளர்ந்தது. ஆனால், தமிழகத்தில் புதிதாக ஒரு ‘5ஜி’ வந்துள்ளது. அது 5வது தலைமுறையையும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்ற தி.மு.க., குடும்பத்தின் ஆசை தான்.
இதுவரை தி.மு.க., செய்த ஊழல்களை எடுத்துச் சொல்ல ஒரு நாள் போதாது. இவர்கள் செய்த ‘2ஜி’ ஊழல் உலகப் பிரசித்தம். தமிழக வளர்ச்சிக்கு பல லட்சம் கோடிகளை தரத் தயாராக இருந்தாலும், அதில் இங்குள்ள தி.மு.க., கொள்ளையடிக்கத்தான் தயாராக உள்ளது.
மக்கள் தலைவர் மூப்பனார், மிகப்பெரிய உயரங்களை தொடும் தகுதி படைத்தவர். அவர் பிரதமர் ஆவதை தடுத்ததும் இவர்கள் தான். தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் காமராஜர். அரசியலில் நேர்மை என்றாலே அவர் தான்.
அவர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம் மிகப்பெரியது. அவரை பின்பற்றி பல நல்ல திட்டங்களை வழங்க அவரது வாழ்க்கை எனக்கு வழிகாட்டியாக உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பல பெரிய கனவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அவை பல இலக்கு உயரங்களை தொடும் என உறுதி அளிக்கிறேன்.
பல ஆயிரம் கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள், 20க்கு மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், ஐ.ஐ.டி., ஆகியவை துவங்கப்பட்டு தொழில் துறை முன்னேறி வருகிறது.
நாட்டின் இரண்டு பாதுகாப்பு தடங்களில் ஒன்றும் 7 மிகப்பெரிய ஜவுளி பூங்காக்களில் ஒன்றும் தமிழகத்தில் உருவாகிறது.
இரும்பு உற்பத்திக்கு, 6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததில், சேலத்தில் உருக்கு தொழில் பெரிதும் பயன்படப்போகிறது.
அடுத்த 5 ஆண்டுகள், தமிழக வளர்ச்சியில் மிக முக்கியம் வாய்ந்தது. ஊழலுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும் காலமாக இது இருக்கும்.
உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் என நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். அது தெரிந்தும் என்னால் அதை பேச முடியவில்லை. இருப்பினும், ‘நமோ ஆப்’ மூலம் பேசுகிறேன். அதை கேட்டு கருத்து தெரிவியுங்கள். இவ்வாறு மோடி பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தேவநாதன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்றனர்.