பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
“இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நின்று தொண்டர்களின் பலத்தை அறிவதற்கு 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளை நாங்கள் கேட்டிருந்தோம்.
இருப்பினும், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தொண்டர்களின் பலத்தை நிரூபித்து காட்டுவதற்காக ஒரு தொகுதியில் மட்டும் நிற்பதாக முடிவெடுத்திருக்கிறோம். அதுவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக முடிவெடுத்திருக்கிறோம்.
அந்தத் தொகுதியில் தொண்டரை நிறுத்துவதைவிட நானே களத்தில் இறங்கி பலத்தை நிரூபிக்கவிருக்கிறேன். அவர்கள் அதிக தொகுதி தர விருப்பமாக இருந்தார்கள். ஆனால், இரட்டை இலை சின்னம் இல்லாததால், ஒரு தொகுதியில் நிற்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். 39 தொகுதிகளில் எந்த தொகுதியில் என்றாலும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.’’ என்றார்.