மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21ம் தேதி இரவு அதிரடியாக கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, கெஜ்ரிவாலை 6 நாட்கள் (28ம் தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லியில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இருந்து டெல்லி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்று ஆளுநரிடம் இதுதொடர்பாக புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், ‘‘டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். எனவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு ஒருவரிடம் தனது பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் புகார் அளித்துள்ளேன்’’ என்றார்.