‘திராணி இருந்தால், முடிந்தால் என்னை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து பாருங்கள்’ என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு சவால் விட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரவி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். ஆனால் தமிழ்நாடு அரசு வடமாநிலத்தவர் மத்தியில் எழுந்துள்ள பீதியை போக்க நடவடிக்கை எடுக்காமல், தலைவர் அண்ணாமலை மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில் வழக்கு பதிந்த சில மணி நேரங்களில், ஸ்டாலின் உள்பட திமுக நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது வன்மத்தை விதைக்கும் வகையில் பேசிய வீடியோவை அவர் வெளியிட்டார். அந்த வீடியோவில் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின், ‘ஹிந்தி பேசுபவர்களை தமிழகத்தில் வேலையில், நுழைப்பது மூலம் பாஜவை வளர்ப்பதற்கு ஒரு சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதனை இங்கு இருக்கும் பழனிசாமி கும்பல்கள் வேடிக்கை பார்க்கலாம். ஆனால் திமுகவோ தமிழக மக்களோ வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள் என பேசிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
பொன்முடி பேசுகையில் “ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என சொன்னார்கள். நம் ஊரு கோவையில் போய் பாருங்கள்..ஹிந்திகாரன் தான் பானி பூரி கடை வைத்திருக்கிறார்கள்” என பேசினார்.
அமைச்சர் நேரு, ரயில் நிலையங்களில் வட மாநிலத்தவர்கள் அதிக பேர் வேலை செய்கிறார்கள என கிண்டலாக பேசுகிறார்.
வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி வட மாநிலத்தவர் தமிழகத்தில் செய்யும் வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார் என பேசிய வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அண்ணாமலை, வழக்கு பதிந்தது தொடர்பாக, “வடமாநில தொழிலாளர்கள் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரசாரங்களையே அறிக்கையாக வெளியிட்டேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை வீடியோவாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன். 24 மணி நேரம் அவகாசம் அளிக்கிறேன், அதற்குள் முடிந்தால் என் மீது கை வையுங்கள் எனவும் சவால் விட்டார்.
தலைவர் அண்ணாமலை பகீரங்க சவால் விட்டு 24 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் கூட, வழக்கம் போல அறிவாலயத்தில் மயான அமைதியே நிலவி வருகிறது.