ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தொடங்கிய என் மண் என் மக்கள் யாத்திரைப்பயணம் நேற்று (ஜூலை 30) முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து, வேண்டும் மீண்டும் மோடி என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறார்.
அதன்படி நேற்று அவர் உரையாற்றியதாவது: முதுகுளத்தூர் மக்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ரோஷத்துக்கு பெயர் போன ஊர் என்றால் முதுகுளத்தூர் என்று சொல்லலாம். தற்போது கடுமையான வெயில் இருந்தாலும் நம்முடன் நடந்து வந்துள்ளீர்கள்.
சகோதர, சகோதரிகளே இந்த மேடையில் ஆற்றல்மிகு தலைவர்கள் நின்றுள்ளனர். அண்ணன் கருப்பு முருகானந்தம், இந்த மாவட்டத்தின் தலைவர் அண்ணன் தரணி மற்றும் மூத்த காரிய கர்த்தாக்கள் ராமசாமி, கதிர்வேல், முருகவேல் மற்றும் நம்முடன் இல்லை என்றாலும் கூட உள்ளத்தால் நம்முடன் இருக்கும் சுடலைமாடன் அவர்கள். இந்த பகுதியின் மண்டல் தலைவர்கள் கபிலன், ஸ்டாலின், கோபாலகிருஷ்ணன், குமரகுரு, பூபதி, அழகுமலை, ராஜசேகர் மற்றும் பொதுச்செயலாளர் ஏபி கணபதி, முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணன் கதிரவன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் மண் என் மக்கள் என்ற யாத்திரையின் நோக்கம் என்றால் என்பதை தெரிந்து கொள்வோம்: இந்திய அரசியலில் எதாவது நல்லது நடந்திருக்கும் என்றால் கடந்த 9 ஆண்டுகளில் மட்டுமா தான் நல்லது நடந்துள்ளது. மோடி அவர்கள் வந்த பின்னர்தான் அரசு வேலை பார்க்கிறது.
ராமநாதபுரம் போன்று வறட்சியான பகுதி, முதுகுளத்தூர் போன்று தண்ணீர் மிகவும் குறைவாக இருக்கக்கூடிய பகுதிகளில் முயற்சி எடுத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நம்முடைய மத்திய அரசு நினைக்கிறார்கள். நாம் வரும்போது பார்த்தோம் பெண்கள் அனைவரும் கையில் 5 முதல் 6 குடங்களில் தண்ணீர் நிரப்பி அதனை ஒரு வண்டியில் வைத்து கையில் இழுத்து வருகின்றனர்.
அதற்கு மோடி ஐயா ஒரு பக்கம் சொல்கிறார். உங்க வீட்டுக்கு குடி தண்ணீர் வரனும், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக பைப்புகளில் தண்ணீர் வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆனால் உங்களுக்கு தெரியும் 70 ஆண்டுகளாக தமிழகத்தின் அரசியலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக திமுகவின் ஆட்சியை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஏதாவது இந்த ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நடந்திருக்கிறதா என்று பார்த்தால், நிச்சயமாக எதுவும் நடக்கவில்லை. வறட்சியாகவே வைத்துள்ளனர்.
அரசியல்வாதிகள் வராங்க, எம்.எல்.ஏ., எம்.பி., வராங்க நிக்கிறாங்க, ஜெயிக்கிறாங்க! போறாங்க, மக்களின் வாழ்க்கை தரத்தின் முன்னேற்றத்திற்காக பார்க்கவில்லை, சகோதர, சகோதரிகளே. அதற்காக உங்களிடம் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் பாதயாத்திரை மூலமாக உங்கள் ஊருக்கும் நடந்து அன்பாக உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோளை வைக்கிறோம்.
மோடி அவர்களை மறுபடியும் 2024ல் நாம் ஆட்சிக் கட்டிலில் அமரவைக்க வேண்டும். இந்த நல்லாட்சியை இன்னும் 5 ஆண்டுகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த யாத்திரை 234 தொகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கிறது.
முதுகுளத்தூர் தொகுதி மூன்றாவது தொகுதியாக இங்கே வந்திருக்கிறோம். வெயிலை பொருட்படுத்தாமல் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தாய்மார்கள் மற்றும் அண்ணாட்சிகள் நிற்கிறார்கள். உங்களிடம் ஒன்றே ஒன்று மட்டும் தெரிகிறது. ஒரே குடும்பத்தின் அரசியலை எப்படி ஏற்றுக்கொள்வீர்கள். குடும்ப அரசியல் அடியோடு நமது அரசியலை நாசப்படுத்திவிடும்.
இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் 3,50000 பேருக்கு 5 ஆண்டுகளில் அரசு வேலை கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தனர். தற்போது 28 மாதம் முடிந்துள்ளது. ஆட்சியின் பாதிகாலம் முடிந்துவிட்டது. திமுக அரசை பார்த்து கேட்கிறேன். இதுவரையில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருப்பீர்கள். ஒரு குரூப் 4 தேர்வை நடத்தி விட்டு சுமார் ஒரு ஆண்டுகாலமாக 1400 பேருக்கு வேலை போடமுடியவில்லை. உங்களால் 2000 வேலையை கூட 28 மாதங்களில் கொடுக்கமுடியவில்லை. அப்போது எப்படி 350000 பேருக்கு அரசு வேலை கொடுப்போம் என்ற உத்தரவாதத்தை கொடுத்துள்ளீர்கள்.
மோடி ஐயா போன ஆண்டு ஏப்ரல் மாதம் சொன்னார், இந்த டிசம்பர் மாதம் 2023 ஆண்டு முடிவடைவதற்குள் நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை இருக்கும். இன்று சுமார் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை கொடுத்தாச்சு. மீதி இந்த டிசம்பர் மாதம் 2023ம் ஆண்டு முடிவடைவதற்குள் மோடி ஐயா அரசு வேலையை கொடுத்துவிடுவார்.
ஒரு பக்கம் டெல்லியில் நல்லாட்சி, உங்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற நல்லாட்சி! இங்குள்ள திமுக ஆட்சி உங்களுக்கு எதுவும் வரக்கூடாது என்று செய்யக்கூடிய ஆட்சி. ஒரு ஜல்ஜீவன் திட்டத்தில் வீட்டுக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஒரு பைப்பை மத்திய அரசு போட வேண்டும் என்றால் கூட முதுகுளத்தூரில் ஒரு பைப் கனெக்சன் பெற ரூ.6,000 பணம் கேட்கிறார்கள். அது முற்றிலும் இலவசமாக வரவேண்டியது. தமிழகத்தில் ரோஷத்திற்கு பெயர் போனவர்கள். அப்படிப்பட்ட ஊரை எத்தனை நாட்கள் வரட்சி பிடியில் வைத்திருக்க நினைக்கிறார்கள். இதற்கு மாற்றம் வரவேண்டும் என்றால் அரசியல் மாற்றம் வரவேண்டும் என்பதே தீர்வு.
மோடி ஐயாவை ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டி போட வேண்டும் என்று மாவட்ட மக்கள் கூறுகிறார்கள். ஒரு வேளை மோடி ஐயா ராமநாதபுரத்திற்கு வந்தால் வரட்சியை போக்குவதற்கு நிரந்தர தீர்வு அளிப்பார் என்று பொதுமக்கள் ஆகிய நீங்கள் கூறுகின்றனர். எனவே வரவேண்டிய தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிற்கும் வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றிபெற செய்வதற்கு உங்களின் வாக்கு இருக்க வேண்டும்.
40 டிகிரி வெயிலிலும் கூட அரசியல் மாற்றம் வருவதற்காக வெயிலை பொருட்படுத்தாமல் இத்தனை பேர் நிற்கிறீர்கள் என்றால், அரசியல் மாற்றம் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என தெரிகிறது. வர உள்ள 2024 மறந்துவிட வேண்டாம். இந்த என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக மோடி ஐயாவின் பெருமை தமிழகம் முழுவதும் பரவட்டும். எனக்கு வாய்ப்பு அளித்த மாவட்ட தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-வ.தங்கவேல்