முதலமைச்சர் ஸ்டாலின் உண்மையை மறைக்கிறார் சட்டசபையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அவரது சேலை, முடி இழுக்கப்பட்டது உண்மைதான்- என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: மணிப்பூர் சம்பவத்தையொட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு கனிமொழி எம்.பி. சில கருத்துக்களை சொன்னார். அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1989-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வை குறிப்பிட்டுப் பேசினார். அந்த சமயத்தில் ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். நானும் சட்டமன்ற உறுப்பினராக அங்கு இருந்தேன். அதன் அடிப்படையில் இதை நான் இங்கு தெரிவிக்கிறேன்.
சட்டசபையில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமல், பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவின் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். அன்றைய திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கினர். அப்போது திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தடுத்தனர். தடுத்துக் கொண்டு இருந்தபோது, ஜெயலலிதாவின் சேலை, முடியை பிடித்து இழுத்தனர்.
இந்த சம்பவம் நடந்த அன்றைய தினமான 1989 மார்ச் 25-ம் தேதியை கருப்பு நாள் என்று சொல்லலாம். இன்றளவும் என் மனதில் அந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இது போன்ற சம்பவம், சட்டசபை வரலாற்றில் நடந்தது கிடையாது. ஆனால், அதனை முதலமைச்சர் ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
சட்டசபையில் இருந்து வெளியேறிய போது மீண்டும் முதலமைச்சராக தான் இங்கு வருவேன் என்று சபதம் எடுத்து அதை நிறைவேற்றினார். அடுத்த தேர்தலில் மக்கள் திமுகவை தோற்கடித்து, ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்துக் கொடுத்தார்கள். உண்மையை மறைத்து பொய்யான தகவலை ஸ்டாலின் பரப்பி வருகிறார். இது கண்டனத்திற்குரியது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.