வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் சர்வ தேச தலைவர்களுக்கு இரவு உணவு ஜனாதிபதி திரௌபதி முர்மு அளிக்க உள்ளார். இதற்கான அவர் நமது நாட்டின் சர்வ கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பிதழ் தான் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பொதுவாக ஜனாதிபதி சார்பில் வெளியாகும் அழைப்பிதழ் மற்றும் அறிவிப்புகளில் அழைப்பாளர் ” இந்திய ஜனாதிபதி ” என்றே இடம்பெறும். ஆனால் ஜி20 மாநாட்டுக்கான அழைப்பிதழில் ” பாரத் ஜனாதிபதி ” என வெளியாகி உள்ளது. இதனால் தான் வரும் 18 ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை பாரத் என அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள படியே அழைக்க மத்திய அரசு வழி வகை செய்யும் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
இது பற்றி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘பாரத்’ என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. பாரத் என்ற வார்த்தை நீண்ட நாட்களாகவே பயன் பாட்டில் உள்ளது. எனவே பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது. அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் பெயரை நாம் இல்லை என கூற முடியாது’’ என்றார். புள்ளி வைத்த இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் இதனை எதிர்க்கும் வேளையில் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி திமுக இப்படி கூறியிருப்பது காங்கிரசுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ஒரு சிலரை தவிர மற்ற அனைத்து தரப்பு மக்களும் பாரத் எனும் பெயரில் இந்தியாவை அழைப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுவது தெரிய வந்துள்ளது. காங்கிரசின் பாரத் ஜூடோ யாத்திரை, பாரத ரத்னா விருதுகள், பாரத மாதாவிற்கு ஜே போன்ற வாசகங்களை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சன், நடிகை கங்கனா ரணாவத், பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவக் உட்பட பல்வேறு சினிமா பிரபலங்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை அனைவருக்குமே பாரத் பெயரை பயன்படுத்தி எக்ஸ் தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.