திமுக ஆட்சியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது: மாநில தலைவர் அண்ணாமலை!

திமுகவின் குடும்ப ஆடிட்டர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடக்கும் அளவுக்கு லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது என ஆத்தூரில் நடைபெற்ற என் மண், என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர்  அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார்.  அதில் அவர்  கூறியிருப்பதாவது: என் மண், என் மக்கள் பயணம், 100 ஆண்டுகளாக மக்களை காத்தருளும் வண்டிக்காளி அம்மன் அருள்பாலிக்கும் ஆத்தூர் மண்ணில், மக்கள் ஆரவாரத்துடன் சிறப்பாக நடந்தேறியது.

தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. லஞ்ச, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி, இளைஞர்களுக்கு கல்விக் கேற்ற வேலைவாய்ப்பு, மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள், மகளிர் மற்றும் விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் என ஒரு நல்ல ஆட்சி வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள், ஜாதி மத அடிப்படையிலான அரசியல் வேண்டாமென்று நினைக்கிறார்கள் என்பது, இந்தப் பயணத்தில் என்னால் உணர முடிகிறது. திமுகவினால் மக்கள் விரும்பும் நல்லாட்சி கொடுக்க முடியவில்லை என்பது தமிழகம் முழுவதும், அனைத்துத் தரப்பு மக்களிடமும் வெளிப்படையாகத் தெரிகிறது.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தமிழகத்தில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களிடம், 30% -40% கமிஷன் கேட்டு, அந்த நிறுவனங்கள் கொண்டு வரும் வேலை வாய்ப்பைத் தடுக்கிறார்கள். திமுகவின் குடும்ப ஆடிட்டர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடக்கும் அளவுக்கு லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. மாற்றத்தை விரும்பும் சாதாரண பொதுமக்கள் கூட்டம்தான் என் மண், என் மக்கள் பயணத்தை எழுச்சி மிகுந்ததாக்குகிறது.

இன்று ஆத்தூர் சின்னாளப்பட்டியில் கூடியிருக்கும் மக்கள் கூட்டம், ஆத்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ. பெரியசாமியை அடுத்த தேர்தலில் பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கும் என்பதற்கான சான்று. ஒரு லட்சத்தி முப்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிக்க வைத்தவர், பணம் சம்பாதிக்கும் அமைச்சரவை கிடைக்காததால் இன்று தொகுதிக்கே வருவதில்லை. மக்கள் நம்பிக்கையை வீணடித்திருக்கிறார். இந்த ஆட்சி நடப்பதே முதலமைச்சர் மகனும் மருமகனும் சம்பாதிக்கத்தான். உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரை கல்வித்துறை அமைச்சராக்கி வைத்திருக்கும் கேவலம் திமுகவில்தான் நடக்கும். மது ஆலைகள் நடத்தும் திமுக முக்கியப் புள்ளிகள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் எல்லாம் சம்பாதிக்க டாஸ்மாக் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவ மாணவியர் இதற்குப் பலியாகிறார்கள்.  ஆனால் அமைச்சருக்கு அதுபற்றிக் கவலை இல்லை. அவர் அமைச்சராக இருப்பதற்காக பள்ளிக் கல்வியை சீர்குலைத்திருக்கிறார்கள். ஊழலுக்குப் பெயர்போன டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா தொழிற்துறை அமைச்சர்.

கர்மவீரர் காமராஜர், சத்தியமூர்த்தி ஐயா, கக்கன் ஐயா அலங்கரித்த அமைச்சரவைப் பதவிகளில், இன்று திமுக குடும்பத்தில் பிறந்ததைத் தவிர வேறொன்றும் தெரியாதவர்கள் இருக்கிறார்கள். வாரிசுகளுக்காக குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நல்லவர்கள் ஆண்ட மண்ணை, நம் கண் முன்னால் திமுகவினர் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.

எளிய பின்புலத்தில் இருந்து வந்த நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுகிறார். மக்கள் குறைகளைத் தெரிந்து கொண்டு அவற்றை நிவர்த்தி செய்கிறார். எளிய மக்களின் கஷ்டம் தெரிந்தவர் அவர். அவரது தொண்டனாக உங்கள் முன் நிற்பது எனக்குப் பெருமை. அவரது ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகத்துக்கு நலத்திட்டங்கள் கொண்டு வந்துள்ளார் நம் பிரதமர்.

பட்டியலின சகோதர சகோதரிகள் நலனுக்காக, ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கும் நிதியைச் செலவிடாமல் திருப்பி அனுப்பும் திமுக, இந்த ஆண்டு, அதை மகளிர் உரிமைத் தொகைக்கு மடை மாற்றியிருக்கிறது. பட்டியலின மாணவர்களுக்கான கல்வி நிலையங்கள், தங்கும் விடுதிகள், வன்கொடுமை நிவாரண நிதி எதையும் வழங்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. இந்த நிதியைத் தணிக்கை செய்து, இவர்கள் மடை மாற்றியதைக் கேள்வி கேட்டால், மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைத் தடுக்கிறார்கள் என்று மத்திய அரசு மீது பழி போட்டு, அந்தத் திட்டத்தை நிறுத்தி விடுவார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்பதே கண்துடைப்புத் திட்டம் தான்.  இந்தியாவிலேயே அதிகக் கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும், மூன்று லட்சத்திற்கும் அதிகமான கடன் சுமையை ஏற்றியிருக்கிறார்கள்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம், அன்றைய தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று சொன்னார். முதல்வரின் மகனும் மருமகனும் ஒரு வருடத்தில் 30,000 கோடி ரூபாய் ஊழல் மூலமாக சம்பாதித்து உள்ளனர் என்று சொன்னாரே அந்த பிடிஆர் தான். அதற்கு அமைச்சர் பெரியசாமி சொன்ன பதில், ‘‘ரேஷன் கடைக்கு போகாதவர்கள் எல்லாம் குறை சொல்லவேண்டிய அவசியம் இல்லை’’ என்று.  இந்த லட்சணத்தில் தான் நடக்கிறது இந்த ஆட்சி. திண்டுக்கல் மாவட்ட திமுகவின் குறுநில மன்னர் ஐ.பெரியசாமி. இவர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர். இவரது மகன் ஐ.பி.செந்தில்குமார், பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். இருவரால் இந்த தொகுதிகளுக்கு என்ன பயன்?

வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த குறுநில மன்னர்கள் போல் குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவுக்கு பாடம் கற்பிப்போம். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர துணை நிற்போம். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top