‘‘கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் பெற்று தரும் திறமை, முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை,’’ என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.
தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டியில் நேற்று (அக்டோபர் 10) பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு, சேலம் பெருங்கோட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பங்கேற்று பேசியதாவது:
திமுக அரசு குலதெய்வ கோவில்களை அரசு கோவில்களாக மாற்றி அதில் கிடைக்கின்ற வருவாயை கொள்ளையடித்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் காவிரியில் தண்ணீர் விடுவதில் அரசியல் செய்கிறது. ஆனால் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது தமிழகத்துக்கு தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அப்போதைய கர்நாடக காங்கிரஸ் முதல்வர் பொம்மையிடம் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது காவிரியில் தண்ணீர் திறந்து விடச்சொல்லி வலியுறுத்தி தண்ணீர் பெற்று தந்தார்.
ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மேல்முறையீடு மேல்முறையீடு என, காவிரியில் தண்ணீர் பெற நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளார். கர்நாடகாவிடம் இருந்து காவிரியில் தண்ணீர் பெற்று தரும் திறமை ஸ்டாலினுக்கு இல்லை. இவ்வாறு அவர் பேசினார். இதில் தருமபுரி மாவட்டத் தலைவர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.