மேட்டுப்பாளையத்தில் உயிர் தியாகம் செய்து கட்சியை வளர்த்துள்ளனர்: அண்ணாமலை புகழாரம்!

தமிழகத்தில் மற்ற இடங்களில் வியர்வை சிந்தி கட்சியை வளர்த்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் தொண்டர்கள் உயிர் தியாகம் செய்து பாஜகவை வளர்த்திருப்பதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடைபெறவிருந்த மேட்டுப்பாளையம் என் மண் என் மக்கள் பயணம், மிலாதுநபி ஊர்வலம் காரணமாக இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும், கட்சிப் பணிகள் காரணமாகவும் சில முறை தேதி மாற்றப்பட்டாலும், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு பியூஷ்கோயல் அவர்கள், மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு எல்.முருன் அவர்கள் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அக்கா திருமதி வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளர் திரு ஏ.பி.முருகானந்தம் ஆகியோர் பங்கேற்க, உற்சாகம் குறையாமல் பெரும் திரளெனக் கூடிய பொதுமக்கள் பேரன்போடு இனிதே நடந்தேறியது.

மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வியர்வை சிந்தி கட்சி வளர்ந்தால், மேட்டுப்பாளையத்தில் தொண்டர்கள் ரத்தம் சிந்தி கட்சியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில், இந்தப் பகுதியில் ஏழு பேர் உயிர் தியாகம் செய்தனர். தீவிரவாதத்துக்கு எதிரான போரில், அவர்கள் தியாகம் வீண் போகாது. பவானி ஆற்றின் கரையில் அமர்ந்து அனைவரையும் காக்கும் வனபத்திரகாளியம்மன் துணையிருப்பாள்.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையமான உதகையின் நுழைவு வாயிலாக இருப்பது மேட்டுப்பாளையம். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து பவானி ஆறு சமவெளியை அடைந்து மேட்டுப்பாளையம் வழியாகவே ஈரோடு மாவட்டத்துக்குச் செல்கிறது. பவானி ஆற்றின் கொடையால் வேளாண்மை இங்கு முக்கியத் தொழிலாக நடைபெறுகிறது. விவசாயத் தொழிலுக்கு அடுத்த படியாக கைத்தறி நெசவுத் தொழிலை அதிகம் பேர் செய்து வருகின்றனர். கொங்கு பகுதியின் காஞ்சிபுரம் என்ற பெருமை கொண்டது சிறுமுகை. 5000 நெசவாளர்கள் உள்ள பகுதி இந்தச் சிறுமுகை. பட்டுப் புடவைகளுக்கு பெயர் போன ஊர். சிறுமுகை பட்டுக்கு தமிழகம், இந்தியா, வெளிநாடுகளில் மவுசு அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் கறிவேப்பிலை பயிரிடப்பட்டுள்ள மொத்தமுள்ள 2,540 ஹெக்டேர் பரப்பளவில், இந்தப் பகுதியில் உள்ள காரமடை வட்டாரத்தில் மட்டும் 1240 ஹெக்டேர் கறிவேப்பிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. காரமடை செங்காம்பு கறிவேப்பிலைக்கு தனி மகத்துவம் உண்டு.மனித உடலுக்கு தேவையான பல சத்துக்கள் மட்டுமின்றி இதன் சுவையும் மணமும் அதிகம். இதற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை, தமிழக பாஜக முன்னெடுத்து செல்லும்.

கடந்த டிசம்பர் 2021ல், அன்னூர் சிப்காட் அமைக்க, விவசாய நிலங்களை கையகப்படுத்த நினைத்த தமிழக அரசையும், அதற்குத் துணை நின்ற இந்தத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜாவையும் எதிர்த்து, விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தி, விவசாய நிலங்களை காப்பாற்றினோம். இன்று வரை அந்த விவசாயிகளுக்கு பாதுகாவலனாக இருப்பது பாஜக மட்டும் தான்.

மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தை புனரமைக்க இதுவரை 75 கோடி ரூபாய் நமது மத்திய அரசு செலவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 580 கோடி ரூபாய் செலவில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை நமது மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்கள் 2016ஆம் ஆண்டு துவங்கி வைத்தார். கோவை விமானநிலைய விரிவாக்கத்திற்கு 2000 கோடி ரூபாய் நமது மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.  பிரதமரின் வீடு திட்டம், ஜல்ஜீவன் குழாய் குடிநீர் திட்டம், இலவச கழிப்பறைகள், இலவச சமையல் எரிவாயு திட்டம், பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம், விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், முத்ரா கடன் உதவி திட்டம் என பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் சாதனையைக் கூறி மக்களிடம் பாஜக வாக்கு கேட்கும். திமுக எதைச் சொல்லி வாக்கு கேட்கும்?

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஒன்பதாண்டு கால ஆட்சியில், பிரதமர் மீது மட்டுமல்ல, அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மீது கூட ஒரு ஊழல் குற்றச்சாட்டு இல்லை. அத்தகைய தூய்மையான, ஊழலற்ற, நேர்மையான ஆட்சி மத்தியில் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் நலனைச் சிந்தித்து ஆட்சி நடத்துகிறது. ஆனால் தமிழகத்திலோ, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சத்துணவு முட்டை, தனியார் கடைகளில் கிடைக்கிறது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். மேட்டுப்பாளையத்தில் வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். நெசவாளர்களுக்கென்று தனியாகக் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 1000 என்பது 2000 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.

மாணவர்களுக்கு சத்துணவு முட்டையை சரியாக கொடுக்கமுடியாத அரசு கஞ்சாவை மிக சாதாரணமாக வாங்கும் சூழலை தமிழகத்தில் இன்று உருவாக்கியுள்ளது. அழுகிய முட்டை அமைச்சர் கீதா ஜீவன், அழுகிய முட்டைகளை  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொடுத்து நல்ல முட்டைகளை தனியாருக்கு விற்று வருகிறார்.

திராவிடர் கழகத்தில் இருந்து, கண்ணீர்துளிகளுடன் பிரிந்து செல்கிறோம் என்று திமுக என்ற கட்சியை தொடங்கினர். பெரியார் திமுகவை கண்ணீர்த்துளிகள் கட்சி என்றே சொல்வார். 1965ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக தலைமையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தேர்தல் வருகிறது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதற்காக திமுக நடத்தும் நாடகம் என்றார் பெரியார். “ஆரம்பத்திலேயே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த நாச வேலைகளும், இத்தனை உயிர் சேதமும், உடைமை சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடி, துப்பாக்கி? பிறகு, முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளார்கள்.? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்” என்று விடுதலையில் எழுதினார் பெரியார். அப்போது காங்கிரஸுக்கு எதிராக, ஹிந்தி திணித்ததாக போராடிய திமுக இன்று அவர்களுடன் கூட்டணியில் இருக்கிறார்கள். ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க திமுக எந்த பக்கம் வேண்டுமானாலும் சாயும். கொள்கை என்பது திமுகவுக்கு என்றும் இருந்ததில்லை.

வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாத காலம் இருக்கிறது. அந்த 210 நாட்களுக்கும், இதே எழுச்சி தொடர வேண்டும். டைம் பத்திரிக்கையில் அதிகார துஷ்பிரயோகம் செய்த பத்து பேரில் ஒருவராக இடம்பெற்ற ஊழல் புகழ் எம்பி ஆ. ராஜாவை அப்புறப் படுத்தி, மக்களுக்காக உழைக்கும் மக்கள் சேவகரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம் பாரதத்துக்காக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 400 பாராளுமன்ற உறுப்பினர்களோடு மீண்டும் ஆட்சி அமைக்க, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 க்கு 39 இடங்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top