சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இந்திய தேசியக் கொடியுடன் பார்க்கவந்த ரசிகர்களிடம் இருந்து போலீசார் கொடியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த அக்டோபர் 23 அன்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி நடந்தது.
11 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் அணி சென்னையில் விளையாடுவதால் போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மைதானத்திற்குள் கருப்பு உடை, இந்திய தேசியக் கொடி எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே இந்திய தேசியக் கொடியுடன் வந்த சில ரசிகர்களிடம் இருந்து போலீசார் கொடியை பறிமுதல் செய்தனர். அக்கொடியை போலீஸ் எஸ்.ஐ., குப்பைத்தொட்டியில் போட்டார். அதனை கண்ட ரசிகர்கள் கடும் கொந்தளிப்பு அடைந்தனர். இதனை சுதாரித்துக் கொண்ட எஸ்.ஐ. உடனடியாக தேசியக்கொடியை எடுத்து காரில் வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அங்கிருந்த ரசிகர்கள் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்தியா முழுவதும் கண்டனம் வலுத்தது.
இந்த நிகழ்வுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் உதயநிதி, இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பியதை குறிப்பிட்டார். கடந்த காலங்களில் பாகிஸ்தானில் நமது வீரர்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களை அவர் மறந்துவிட்டார். திமுக அமைச்சர் பொன்முடியின் மகனும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவருமான அசோக் சிகாமணி அரசியல் பிரசாரத்தை ஒருபடி மேலே கொண்டு சென்று இன்று நமது தேசத்தின் கொடியை அவமதித்துள்ளார்.
சேப்பாக்கத்தில் இன்றைய போட்டிக்கு இந்தியக் கொடியை ஏந்தியபடி சென்ற ரசிகர்களை மைதானத்திற்கு வெளியே போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த உரிமையை யார் கொடுத்தது? நமது தேசியக் கொடியை அவமதித்த போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் மாநில பொதுமக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இல்லை என்றால் மூவர்ண கொடியின் புனிதத்தை இழிவுபடுத்தும் இந்த ஊழல் திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.