மக்களையும், மாணவர்களையும் நீட் தேர்வை வைத்து திமுக ஏமாற்றி வந்ததை போன்று தற்போது கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்து தமிழக மக்கள் தலையில் மீண்டும் மிளகாய் அரைக்க பார்க்கிறது.
இது தொடர்பாக துக்ளக் பத்தரிகையின் உதவி ஆசிரியர் சத்யா தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வுக்கு ஆதரவாக இருப்பது சுப்ரீம் கோர்ட். அது மனம் மாற தக்க காரணம் இல்லை. தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டியவர் ஜனாதிபதி. அவர் தன் முடிவை சொல்லவில்லை. அதற்குக் கால அவகாசம் எதுவும் இல்லை. அதிமுக ஆட்சியிலேயே நீட் விலக்கு கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இந்த நிலையில் நீட்டுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து வாங்குவதால் என்ன பயன்? இதற்கு பயந்து சுப்ரீம் கோர்ட்டோ, ஜனாதிபதியோ நீட் விலக்குக்கு ஒப்புதல் தந்து விடப் போவதில்லை.
நாங்கள் எவ்வளவோ முயன்றும் நீட்டை விலக்கிக் கொள்ள மறுக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாறுவதுதான் இதற்கு ஒரே தீர்வு நாற்பதுக்கு நாற்பதிலும் எங்களை ஜெயிக்க வையுங்கள் என்று பிரசாரம் செய்ய மட்டுமே இந்த கையெழுத்துகள் உதவும். நோக்கமும் அதுதான். இ.ண்.டி. கூட்டணி தலைவர்கள் கூட கையெழுத்து போடுவார்களா என்பதும் சந்தேகம்தான். அப்படியிருக்க அந்த கூட்டணி தப்பித் தவறி ஜெயித்தாலும் எப்படி இந்த கோரிக்கையை ஏற்கும்?
தவிர, இப்படி கையெழுத்து போட்டு சாதிக்கப்பட்ட விஷயம் ஒன்று கூட இல்லை. வேறு உபயோகமாக எதையாவது செய்யலாம், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.