சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று (அக்டோபர் 25) மதியம் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தை திசைதிருப்ப முதல்வர் ஸ்டாலின் தயாராகிக் கொண்டிருப்பார் எனத் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று (அக்டோபர் 25) மதியம் வேளையில் திடீரென்று ஒரு நபர் 4 பெட்ரோல் குண்டுகளுடன் வந்து சராமாரியாக ஆளுநர் மாளிகை நோக்கி வீசியுள்ளார். இதில் இரண்டு குண்டுகள் வெடித்திருப்பதாக கூறப்படுகிறது. பாதுகாவலர்களின் சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏறபடவில்லை.
இந்த நிலையில், வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது, தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது. முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக இருக்கும்போது, குற்றவாளிகள் தெருக்களில் இறங்கிவிட்டனர்.
2022 பிப்ரவரியில் சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தை தாக்கிய அதே நபர் தான் இன்று ராஜ்பவன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு திமுக அரசுதான் நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. முதல்வர் ஸ்டாலின் எப்பொழுதும் செய்வது போல் இப்போதும் இதை திசைதிருப்ப தயாராகிக் கொண்டிருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.