கடந்த முப்பது மாதங்களாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இதுவரை இல்லாத அளவுக்கு சீர்குலைந்து இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
நேற்று (அக்டோபர் 26) என் மண் என் மக்கள் பயணம், ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் பெரும் திரளாகச் சூழ வெகு சிறப்பாக நடைபெற்றது. மகாகவி பாரதி, மனிதனுக்கு மரணமில்லை என்ற அற்புதமான உரையாற்றிய மண் ஈரோடு. விவசாயம், நெசவுத் தொழில், தொழிற்சாலைகள் என அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து சிறக்கும் மண் ஈரோடு. கணித மேதை ராமானுஜம், பாசனத் தந்தை எம் ஏ ஈஸ்வரன், நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மாவீரன் தீரன் சின்னமலை போன்றவர்கள் பிறந்த புனிதமான மாவட்டம் ஈரோடு.
திமுக, தமிழக காவல்துறையின் கையைக் கட்டிப் போட்டிருக்கிறது. காவல்துறையின் தரத்தை தாழ்த்தியிருக்கிறது. திமுக தலைவர்களும், அமைச்சர்களும், தொடர்ச்சியாக ஆளுநர் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதன் விளைவுதான் ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சுக்கு காரணம். ஆனால், காவல்துறையினரை முடக்கி வைத்திருக்கிறது திமுக.
கடந்த முப்பது மாதங்களாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இதுவரை இல்லாத அளவுக்குச் சீர்குலைந்து இருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்குப் பத்து லட்சம் நிவாரணம் கொடுக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், டாஸ்மாக் சாராயத்தைக் குடித்தவர்களால் பல்லடம் அருகே கொலை செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு லட்சம் மட்டுமே நிவாரண நிதி கொடுக்கிறார். கோவை தற்கொலைப் படை தாக்குதலை, தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்து, தீவிரவாதிகளைக் கைது செய்த பிறகும், சிலிண்டர் வெடிப்பு என்று சமாளித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
நமது மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலமாக ஈரோடு நகரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 1304 கோடி ரூபாய். இதில் 1079 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவுபெற்றுவிட்டன. 224 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்றுவருகின்றன. அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஜவுளிச் சந்தை புதுப்பித்தல் பணி, பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு பணிகள் என்று 54 திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தபட்டுள்ளன. ஆனால், திமுக, மத்திய அரசு திட்டங்கள் அனைத்திலும் ஊழல் செய்கிறது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக, மத்திய அரசின் நலத்திட்டங்களைக் கூறி வாக்கு கேட்கும். திமுக எதைச் சொல்லி வாக்கு கேட்கப் போகிறது? ஈரோடு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ஈரோட்டில் அரசு வேளாண்மை கல்லூரி, ஈரோட்டில் அரசு சட்டக்கல்லூரி, ஈரோட்டில் உணவு பூங்கா, ஈரோடு மாவட்டத்தில் பல்கலைக்கழகம், வேளாண் கருவிகள் உற்பத்தி தொழிற்பேட்டை, ஈரோடு வர்த்தக மையம், நெசவாளருக்கென்று தனி கூட்டுறவு வங்கி என திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. கடந்த ஆட்சியில் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்ட மஞ்சள் ஆராய்ச்சி மையத்தை 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டியதாக அறிவித்து கண்துடைப்பு நாடகத்தை மட்டும் நிகழ்த்தியுள்ளனர்.
99% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை கொடுப்போம் என்று சொல்லிவிட்டு, தற்போது யாருக்குக் கொடுக்கிறார்கள் என்பதே தெரியாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஐந்து ஆண்டுகளில், மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை என்று வாக்குறுதி கொடுத்த திமுக, முப்பது மாதங்கள் கடந்த பின்னரும், அதில் ஒரு சதவீதம் கூட வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் நடக்கிறது. செவிலியர்கள் போராட்டம் நடக்கிறது. ஆனால், வெட்கமே இல்லாமல் பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழகத்தை ஒரு குடிகார மாநிலமாக, அமைச்சர் முத்துசாமி அவர்களின் வார்த்தையில் சொல்வதானால், தமிழகத்தை ஒரு மதுப்பிரியர்களின் மாநிலமாக மாற்ற முயற்சித்து வருகிறார் அமைச்சர் முத்துசாமி. காலையில் 7 மணிக்கே சாராய கடை திறப்பது, பத்து ரூபாய் கமிஷன் வாங்குவது, சிறிய பாக்கெட் மூலமாக சாராயம் விற்பது, புதிய வகை பீர் ரகங்களை அறிமுகப்படுத்துவது, மதுப்பிரியர்கள் போதையில் இருக்கும் போது சாராய விலையை ஏற்றிவிடுவது இவைதான் அவர் செய்துள்ள புரட்சி. இந்த ஆண்டு டாஸ்மாக் வருமானம் 52000 கோடி ரூபாய் வரும் என்று சொல்கிறார்கள். சென்ற ஆண்டை விட இது 8000 கோடி ரூபாய் அதிகம். மகளிர் உரிமை தொகைக்கு அரசு இந்த ஆண்டு ஒதுக்கிய நிதி 7000 கோடி ரூபாய். மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் மது விற்பனையை அதிகரிக்கத்தான் திட்டம் போட்டிருக்கிறார்கள்.
ஈரோடு மாநகராட்சியில் அமைந்துள்ள நேதாஜி மார்க்கெட்டை ஏலம் எடுத்துக் கொண்டு மாநகராட்சியையே ஏலம் எடுத்தது போல் திமுகவினர் அராஜகம் செய்து கொண்டிருக்கின்றனர். கொங்கலம்மன் கோவில் கடைகள், திருச்சி கஃபே ரோடு, மணிக்கூண்டு ரோடு, சத்தி ரோடு, சோலார் சந்தை, சாஸ்திரி நகர் சந்தை, கன்னிராவுத்தர் குளம், மாணிக்கம் பாளையம் சந்தை, ஐடிஐ சந்தை, மீனாட்சிசுந்தன்றனர் சாலை போன்ற பகுதிகளில் திமுகவினர் தினசரி வசூல் செய்துகொண்டிருக்கின்றனர். நேதாஜி மார்க்கெட்டில் இரண்டு சக்கர வாகன நிறுத்தத்துக்கு எந்த ஒரு ஒப்பந்தமும் மாநகராட்சி விடவில்லை. ஆனால் திமுகவினர், ஒவ்வொரு வாகனத்துக்கும் 10 ரூபாய் வசூல் செய்கின்றனர் இது போக விவசாயிகள் ஏற்றி வரும் காய்கறிகளுக்கு, ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் வசூல் செய்கின்றனர். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் வாகன நிறுத்தம் இலவசமாகத்தான் இருந்தது.
ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் மொத்தம் 700 கடைகள் தான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் திமுகவினர், வசூல் செய்வதை மட்டுமே கருத்தில் கொண்டு கிட்டத்தட்ட 1300 கடைகளை அனுமதி இன்றி மார்க்கெட் வளாகத்துக்குள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இப்படி அராஜக வசூல் மூலம், மாதம் ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகள், சிறுகுறு வியாபாரிகள், மளிகை கடைக்காரர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இது சம்பந்தமாக பலமுறை திமுக அமைச்சர் முத்துசாமியிடம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வரும் பாராளுமன்ற தேர்தலில், திமுகவின் மக்கள் விரோத அராஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை, மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்க, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.