திமுகவுக்கு விவசாயிகள் மீது அக்கறை எப்போதுமே இருந்ததில்லை: பரமத்தி வேலூரில் அண்ணாமலை பேச்சு!

திமுகவுக்கு விவசாயிகள் மீது அக்கறை எப்போதுமே இருந்ததில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சித் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் பற்றி, என் மண் என் மக்கள் பயணம் மூலம், மாநில தலைவர் அண்ணாமலை பொதுமக்களை நேரடியாக சந்தித்து வருகின்றார். அந்த வகையில் நேற்று (அக்டோபர் 31) நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களை சந்தித்தார்.

இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

இன்றைய என் மண் என் மக்கள் பயணம், பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளியுள்ள கபிலர்மலை அமைந்திருக்கும் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மேல் பேரன்பு கொண்ட பொதுமக்கள் சூழ வெகு சிறப்பாக நடந்தேறியது. கி.பி., 17ஆம் நூற்றாண்டில், பரமத்தியை ஆட்சி செய்த மன்னர் அல்லாள இளைய நாயக்கர், 1623ஆம் ஆண்டு, பரமத்தி வேலூர் பகுதியில் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற வேண்டும் என்பதற்காக ஜேடர்பாளையத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவுக்கு ராஜவாய்க்காலை வெட்டினார். இந்த ராஜவாய்க்கால், இன்றும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதுடன், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது.

பரமத்தி வேலூர் என்றாலே வெற்றிலை மற்றும் சர்க்கரை தான் நினைவுக்கு வரும். பரமத்தி வேலூரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரும்புச் சாகுபடியை மையப்படுத்தி, மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பரமத்தி வேலூர் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 200 க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகின்றன்.

தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றி விட்டோம் என்று பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கரும்பு விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளான, தேர்தல் வாக்குறுதி எண் 34: கரும்பு விவசாயிகளுக்குக் கூட்டுறவு ஆலைகளும் தனியார் ஆலைகளும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒரு கால வரையறைக்குள் பெற்றுத் தந்திட உரிய தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும், வாக்குறுதி எண் 55: சத்துணவு மையங்கள் அரசு மாணவர் தங்கும் விடுதிகள் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களின் உணவு விடுதிகளுக்கு தேவையான வெல்லம் பனைவெல்லம் சர்க்கரை கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலம் மட்டுமே வாங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும், வாக்குறுதி எண் 68: நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நியாயவிலை கடைகளில் நாட்டுச் சர்க்கரையும் வெல்லமும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும், வாக்குறுதி எண் 75: கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஒரு டன்னுக்கு ரூபாய் 4000 ஆக உயர்த்தி நிர்ணயிக்கப்படும். இவற்றில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.

திருமணிமுத்தாறு காவேரி இணைப்பைச் செயல்படுத்தினால், பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி பெறும். இதனைச் செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை, திருமணிமுத்தாறு காவேரி இணைப்பை செயல்படுத்தவில்லை. திமுகவுக்கு விவசாயிகள் மீது அக்கறை எப்போதுமே இருந்ததில்லை.

பரமத்தி வேலூர், சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 1000 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இங்கே வெற்றிலை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது இங்கே வெற்றிலை ஆராய்ச்சி மையம் செயல்படுவது இல்லை. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டது. வெற்றிலை சாகுபடி அதிகமாக நடக்கும் இந்தப் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் செயல்பட்டால் தான் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். மீண்டும் வெற்றிலை ஆராய்ச்சி மையம் இந்தப் பகுதியில் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், யார் என்ன எழுதிக் கொடுத்தாலும், அது உண்மையா பொய்யா என்பது தெரியாமல் அப்படியே ஒப்பித்து விடுவார். கடந்த 19 வருடங்களில், தமிழகத்திற்கு 85,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று, இன்று பேசியுள்ளார். அவர் கூறும் 19 வருடங்களில், 2004 – 2013 வரை திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிதான் மத்தியில் ஆட்சியில் இருந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த 2004 – 2014 பத்து வருடங்களில், தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி 1,52,902 கோடி ரூபாய்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் 2014-2023 ஒன்பதாண்டு ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி 4,77,855 கோடி ரூபாய். திமுக காங்கிரஸ் கூட்டணியை விட மூன்று மடங்கு அதிகம். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து கொள்ளை அடித்த 2004-2014 காலத்தில் தான் தமிழகத்திற்கு 85,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எதற்கு தமிழகத்திற்கு 85,000 கோடி கொடுக்காமல் வஞ்சனை செய்தார்கள் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும். மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த இந்த ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.

திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. கிராம நிர்வாக அலுவலர், அவரது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்படும் அளவுக்கு ஏற்கனவே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. நேற்று, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே, அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்கு, திமுகவினர் கொண்டு வந்துள்ளனர்.

பரமத்தி வேலூர் பகுதி விவசாயிகள், இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்களை, கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, கொடுமுடி விவசாய சந்தையில் விற்பனை செய்கின்றனர். பிலிக்கல்பாளையம் -கொடுமுடி பாலம் கட்டப்பட்டால் அந்த தூரம் வெகுவாக குறையும். ஆனால், இந்தப் பாலம் கட்ட நடவடிக்கை எடுப்போம் என்று சொன்ன திமுக, ஆட்சிக்கு வந்து முப்பது மாதங்கள் கடந்தும் ஒரு செங்கலை கூட வைக்கவில்லை.

நமது பாரதப் பிரதமர் தமிழகத்திற்கு வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் நாமக்கல் மருத்துவக் கல்லூரியும் ஒன்று. 21,947 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 3,19,462 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,45,525 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,17,778 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, பிரதமரின் 5 லட்ச ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு திட்டம் 1,21,516 பேருக்கு, 85,505 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 3422 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என மத்திய அரசு செய்துள்ள நலத்திட்டங்கள் ஏராளம்.

வரும் பாராளுமன்ற தேர்தலில், மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நலத்திட்டங்கள் தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பிரதமரின் கரங்களை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top