நாகா இன மக்கள் நாய்கறி சாப்பிடுகிறார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய போது, ‘ நாகாலாந்துக்காரன் நாய்க்கறி சாப்பிடுவான்; நாய்க்கறி தின்கிறவனுக்கே, இவ்வளவு சொரணை வந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை ஓட ஓட விரட்டினான் என்றால், உப்பு போட்டு சோறு சாப்பிடும் தமிழனுக்கு, எந்தளவுக்கு சொரணை இருக்கும் என்பதை அவர் மறந்து விடக்கூடாது ‘ என்று தெரிவித்தார்.
நாகா மக்கள் நாய்கறி சாப்பிடுபவர்கள் என்று அவதூறாக பேசிய ஆர்.எஸ்.பாரதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங் எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், ஆர்.எஸ்.பாரதி அவர்களே, உங்கள் பெயரில் ‘பாரதம்’ இருந்த போதும், ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் ஒரு சமூகத்தை அவமதித்து காயப்படுத்த முயற்சித்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
‘இ.ண்.டி.’ கூட்டணி கட்சியினரே, தயவு செய்து உங்கள் வார்த்தைகளை கட்டுப்படுத்துங்கள். எங்கள் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள். எங்களையும், எங்கள் கலாசாரத்தையும் அறிந்து கொள்ள வடகிழக்கு பகுதிக்கு வாருங்கள். நம் உணவு பழக்கத்தை விமர்சித்தவர்களுக்கு வடகிழக்கு மக்கள் அனைவரும் இணைந்து தகுந்த பாடம் புகட்ட வேண்டும்,’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.