மத்திய அரசு மீது தொடர்ந்து வன்மத்துடன் பொய் புகார்களை கூறி வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், மத்திய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என்று மீண்டும் அதே பொய்யை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். ‘அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மத்திய அரசு மதிக்கவில்லை’ என்றும் கூறியிருக்கிறார்.
இந்த கட்டுக்கதைகளை சொல்லும் முன்பாக அவர் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எப்படி செயல்பட்டது என்பதை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்துக் கொண்டால் நல்லது.
அப்போது பாஜக ஆட்சி செய்த மாநிலங்களையும் மாநில முதல்வர்களையும் காங்கிரஸ்- கூட்டணி எப்படி பழிவாங்கியது என்பதை ஸ்டாலின் அவர்கள் எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது குஜராத் அரசு மீதும் அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த மரியாதைக்குரிய திரு.நரேந்திர மோதி அவர்கள் மீதும் அரசியல் காழ்ப்புணர்வுடன் காங்கிரஸ் மற்றும் திமுக அமைச்சர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நான் பட்டியலிட தேவையில்லை. நாட்டு மக்களுக்கே தெரியும்.
அப்போதைய குஜராத் மாநில அமைச்சராக இருந்த அமித் ஷா அவர்களை அரசியல் ரீதியாக ஒழித்து கட்டி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மத்திய ஆட்சியில் இருந்த திமுக மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வளவு ஏன்? தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைத்தவர்கள் யார்? எந்த கட்சி? என்பது ஸ்டாலினுக்கு ஞாபகத்தில் இல்லையா? அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி நேரு குடும்ப பிரதமர்கள் திமுகவை எப்படி நடத்தினார்கள். நெருக்கடி நிலையை எதிர்த்து மிசா சட்டத்தை எதிர்த்ததற்காக சிறை சென்றதாக அடிக்கடி மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அந்த சட்டத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சியினரை மிரட்டி அடிபணிய வைத்த அப்போதைய பிரதமர் காங்கிரஸ் கட்சியின் இந்திரா காந்தி என்பதை ஞாபக படுத்த விரும்புகிறேன்.
அந்த சமயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முதல் அமைப்பாக இருந்த பாரதிய ஜனசங்க தலைவர்கள் தான் நாடு தழுவிய அளவில் இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையை எதிர்த்து போராடினார்கள். திமுக உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும் போராடியது, வாதாடியது மட்டுமல்லாமல் பல மாதங்கள் சிறை வாசம் அனுபவித்ததும் ஜனசங்க தலைவர்கள் என்பதை ஸ்டாலின் மறந்து விடக் கூடாது.
காலம் காலமாக இந்த நாட்டில் ‘மன்னராட்சி’ நடந்தி வந்த காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தினரின் கூட்டணி நிழலில் இருந்து காலத்தை கடத்தி வரும் மு.க.ஸ்டாலின் இப்போதைய மத்திய பாஜக அரசு மாநில உரிமையை பறிப்பதாக நா கூசாமல் பொய்யுரைப்பது பார்த்தால் வேடிக்கையாக உள்ளது.
அதே காங்கிரஸ் கட்சியை, நேரு குடும்ப வாரிசான ராகுல் காந்தியை தான் நாட்டின் பிரதமராக துடித்துக் கொண்டிருக்கிறார் மு.க. ஸ்டாலின். அதாவது யார் திமுகவின் அடியை வெட்டினார்களோ அவர்களுக்கே சமரம் வீசுவது அதேச மு.க.ஸ்டாலின். பாஜகவையும், மத்திய அரசையும் பார்த்து மாநில உரிமையை பறிப்பதாக அவர் கூறுவதை பார்த்து நாட்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.
அடுத்ததாக ‘நீட் தேர்வு உயிர்களைப் பறிப்பதாகவும் நீட் விலக்கிற்கான அரைக் கோடி கையெழுத்துகளைப் பெற்று ஜனநாயகப் போர்க்களத்தில் வெல்லப்போவதாக’ ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் சமயத்தில் மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்வதற்காக என்ன வாக்குறுதி கொடுத்தோம் என்பதை மு.க.ஸ்டாலின் எண்ணிப் பார்த்தால் நல்லது.
ஆட்சியில் அமர்ந்தவுடன் நீட் விலக்கிற்கு முதல் கையெழுத்து போடுவதாக ஜம்பமாக பேசினார். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நீட் தொடர்பான வழக்கில் உத்தரவு பெறாமல் மத்திய அரசோ, மாநில அரசோ எதையும் செய்ய முடியாது என்பதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இது தெரிந்து இருந்தும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முதல் கையெழுத்து போடுவதாக பிரசாரத்தில் பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார், முதலமைச்சராக பதவி ஏற்றார் ஸ்டாலின்.
ஆனால் இன்றோ பரிதாபம் மக்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருப்பதாக கூறுகிறார். அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு செய்ய முடியாத ஒன்றை கையெழுத்து இயக்கம் நடத்துவதாக வாய்ஜாலம் செய்கிறார். நான் அவரிடம் கேட்டுக் கொள்வது ஒன்றை தான். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு எனக் கூறி வாங்கும் கையெழுத்தை யாரிடம் தரப்போகிறார்?
மத்திய அரசிடமா?
ஆளுநரிடமா? அல்லது
உச்ச நீதிமன்றத்திலா?
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வாதத்தை வைக்க முடியாத முதலமைச்சர், நீட் தேர்வுக்கு ஆதரவாக இருக்கும் அவரது தோழர்களான காங்கிரஸ் முதலமைச்சர்களையும், இடதுசாரி கட்சி முதலமைச்சரையும் சம்மதிக்க வைக்க முடியவில்லை. அவர்களது ‘இன்டி’ கூட்டணிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் எனக் கூறி கூட்டணி கட்சியை திரட்ட முடியவில்லை.
அந்த கூட்டணியில் திமுகவை தவிர அனைவரும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. தங்கள் மாநிலங்களில் நடத்துகிறார்கள். ஆனால் மு.க.ஸ்டாலின் கண்களுக்கு இது தெரியாதா அல்லது மக்களை ஏமாற்ற மறைக்க பார்க்கிறாரா?
சொந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்பு வாதத்தை வைத்து அவர்களை சம்மதிக்க வைக்க முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களை தூண்டி விடுவது நியாயமா?
இந்த கேள்வியை அவரால் கூட்டணிக் கட்சி முதலமைச்சர்களிடம் கேட்க முடியுமா? கேட்டால் அவர்கள் நீட் தேர்வால் எந்த பாதகம் என்று கேட்டு விடுவார்கள். பூனைக் குட்டி வெளியே வந்து விடும். அதனால் தமிழக மக்களை ஏமாற்றலாம் என அவர் பகல் கனவு காண்கிறார். தமிழகத்திலும் மாணவர்கள் நீட் தேர்வை எழுதி வருகிறார்கள். தேசிய அளவில் நீட் தேர்தவில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலில் தமிழக மாணவர்கள் பிரகாசிக்கிறார்கள்.
நீட் எதிர்ப்பு என்பது பகல் வேஷம். அதனை தமிழக மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான உதயநிதி ஸ்டாலினும் நடத்தி வரும் நீட் எதிர்ப்பு நாடகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப தயாரில்லை. அவர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
டாக்டர் எல்.முருகன், மத்திய இணை அமைச்சர்