ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி., தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.300 கோடி ரொக்கமாகச் சிக்கிய சம்பவம் நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் எம்.பி., தீரஜ் சாஹூவுக்குத் தொடர்புடைய இடங்களில் டிசம்பர் 6-ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தத் தொடங்கினர்.
இதில், பௌத்தில் ராணிசாதி அரிசி ஆலை, சுந்தர்கரில் உள்ள வீடு, அலுவலகம், மதுபான ஆலைகள், புவனேஸ்வரில் கார்ப்பரேட் அலுவலகம், சம்பல்பூர், போலங்கிர், தித்திலாகர், ரூர்கேலா பகுதிகள் என ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவில் காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூவுக்குத் தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திவந்தனர்.
இந்த நிலையில், ஒடிசாவில் அவருக்குத் தொடர்புடைய பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் நேற்று (டிசம்பர் 6) சோதனை நடத்தினர். அப்போது, அதிகாரிகளுக்கே அதிர்ச்சியளிக்கும் வகையில் கட்டுக்கட்டாக ரூ.300 கோடி ரொக்கமாகப் பிடிபட்டது. பிற இடங்களில் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள் காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், ‘‘பொதுமக்களிடம் எதைக் கொள்ளையடித்தாலும், அதன் ஒவ்வொரு பைசாவையும் திருப்பித் தர வேண்டும். இதுதான் மோடியின் உத்தரவாதம்’’ என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும், ‘‘இது ஒரு வங்கியுடைய பணப் பெட்டகம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. இது காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹூ என்பவர், ஊழல் செய்து முறைகேடாகக் குவித்திருக்கும் ரூ.300 கோடி பண மூட்டை. வருமான வரித்துறை சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. ‘இ.ண்.டி.’ கூட்டணியிலுள்ள அத்தனை கட்சிகளும், ஊழல் செய்வது, சனாதன தர்மத்தை வெறுப்பது என்ற இரண்டு விஷயங்களில் மட்டும் ஒத்துப் போவார்கள்’’ என்று அதிகாரிகள் கைப்பற்றிய பணத்தின் வீடியோவைப் பதிவிட்டுச் சாடியிருந்தார். இந்த விஷயத்தை மேலும் தீவிரமாக்கிவரும் பா.ஜ.க., இதில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.