மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப் பிரிவு நிர்வாகிகள் மத்தியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தினார்.
தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர்கள் கூட்டம், ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவர் ரங்கநாயகலு தலைமையில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.
அவர் பேசும்போது, திமுக அரசின் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். மத்தியில் ஆட்சியில் இருக்கும் நாம் செய்த நலத்திட்டங்களை மக்களிடையே எடுத்துச்செல்ல வேண்டும். மக்களின் கருத்து மற்றும் அவர்களின் தேவைகளை ஊடகப் பிரிவு கண்டறிய வேண்டும்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து எம்.பி.க்கள் வெற்றி பெறுவதற்கு மகத்தான பங்காற்ற வேண்டும். மக்களுக்கும் கட்சிக்கும் பாலமாக இருக்க வேண்டியது ஊடகப் பிரிவின் கடமை. அனைத்து ஊடகங்களுடன் நல்ல நட்பைத் தொடர வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, எம்.சக்கரவர்த்தி, மாநிலச் செயலர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.