தமிழகத்தில் ஒரே ஒரு டாஸ்மாக் கடை இருக்கும் வரை, மக்கள் விரோத திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்று என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் ஐந்தாம் கட்ட யாத்திரைப் பயணம் கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று (டிசம்பர் 18) நடந்த யாத்திரை நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை குறித்து விளக்கி பேசினார்.
இதனிடையே யாத்திரைப்பயணம் பற்றி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
இன்றைய (டிசம்பர் 18) ‘என் மண் என் மக்கள்’ பயணம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில், தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்பதற்காக, பெரும் திரளாக எழுச்சியுடன் கூடியிருந்த பொதுமக்கள் நடுவே வெகு சிறப்பாக நடந்தேறியது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, விழுப்புரம் மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இதுவரை 4,777 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும், 76,904 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 2,67,008 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,48,964 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,30,371 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,88,474 பேருக்கு, 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிரதமரின் மருத்துவ காப்பீடு, 5,28,599 விவசாயிகளுக்கு, வருடம் 6000 ரூபாய் நிதி, 5104 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என, தமிழகத்திலேயே மத்திய அரசின் திட்டங்கள் மூலம் அதிகம் பயனடையும் மாவட்டங்களில் விழுப்புரமும் ஒன்று.
மேலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களைச் சென்றடைய, மோடி கேரன்டி வாகனங்கள் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் வந்து, மக்களைச் சந்தித்து, அந்த நலத்திட்டங்களில் மக்களை இணைத்துக் கொள்ளும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு, மக்கள் நலத் திட்டங்களில் சாதனை செய்தால், தமிழக அரசு, பண்டிகை தினங்களில் டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே சாதனை செய்கிறது.
நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், நேற்று (டிசம்பர் 17) நடந்த இரண்டாம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், காசி மற்றும் கன்னியாகுமரி நகரை இணைக்கும் காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.. தமிழின் பெருமையான திருக்குறளை, அசாமீஸ், அவாதி, போஜ்புரி, போடோ, டோக்ரி, காஷ்மீரி, கொடவா, கொரகா, மைதிலி, துளு ஆகிய 10 இந்திய மொழிகளிலும் பர்மீஸ், கிரியோல், மலாய், ஜாப்பனீஸ், டேனிஷ் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் பயன் பெற பிரெய்லி மொழியிலும் திருக்குறள் நூலை வெளியிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் திருக்குறளை 29 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளார் நமது பாரத பிரதமர். இது மட்டுமா, பார்வை குறைபாடுள்ள மாற்று திறனாளிகள் பயன்பெற தொல்காப்பியம், புறநானூறு, மணிமேகலை உட்பட 45 தமிழ் இலக்கண, இலக்கிய, சங்க இலக்கிய நூல்களை பிரெய்லி மொழியில் நேற்று வெளியிட்டுள்ளார் நமது பிரதமர். தமிழை வளர்த்தோம் என்று சொல்லும் திமுக, திருக்குறள் நூலை உலகம் அறிய செய்ய என்ன செய்தது?
நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் நேற்று (டிசம்பர் 17) காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் பேசும்போது, தமது உரையின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பை, செயற்கை நுண்ணறிவு முறையில் ஒலிக்கச் செய்தார். வெகுவிரைவில் தமிழ் மக்கள், பாரத பிரதமர் மோடி அவர்கள் பேசும் அனைத்து உரைகளையும் தமிழில் கேட்கலாம். திமுக இனி பொய்களைப் பரப்பி அரசியல் செய்யமுடியாது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும், சாராயம் காய்ச்சும் துறைக்கும், செம்மண் கடத்தும் துறைக்கும் தான் அமைச்சர்களாக இருக்கிறார்களே தவிர, மக்கள் நலனுக்கான பணிகளைச் செய்வதில்லை. இரண்டு அமைச்சர்கள் இருந்தும் விழுப்புரம் மாவட்டத்திற்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.
அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் நடந்த அமலாக்கத் துறை சோதனையில், பல கோடி முறைகேடாகச் சேர்த்த பல கோடி பணத்துக்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. இவை மக்கள் பணம். வெளிநாட்டில் நிறுவனங்களை வாங்கியதில், அமைச்சர் பொன்முடி, ஹவாலா மூலம் பெருமளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இது தான் தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சரின் லட்சணம்.
தமிழகத்தில் ஒரே ஒரு டாஸ்மாக் கடை இருக்கும் வரை, மக்கள் விரோத திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. தமிழகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தந்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த, நமது குழந்தைகள் எதிர்காலத்துக்காக, வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.