கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஊரே வெள்ளக்காடாக மாறியது. ஒவ்வொரு இடமும் தண்ணீரில் மூழ்கியிருந்தது. ஆயிரக்கணக்கான விளை பயிர்கள் நீரில் மூழ்கியது. பொதுமக்கள் கால்நடைகள் மற்றும் தங்களின் வீடுகளை இழந்து நிற்கதியாய் உள்ளனர். பலர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டங்களிலும் பாஜக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநில தலைவர் அண்ணாமலை திருநெல்வேலிக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து நிவாரணம் வழங்கி வருகிறார்.
அதன்படி காலை (டிசம்பர் 20) திருநெல்வேலி டவுன் பகுதியிலுள்ள, பகத்சிங் தெரு மற்றும் முகமது அலி தெருவில், வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு, பொதுமக்களுடன் உரையாடி, அவர்களின் உடனடித் தேவைகளைக் கேட்டறிந்தார். தமிழக பாஜக, பொதுமக்களுடன் தோளோடு தோள் நின்று, மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ளும் என்று உறுதி அளித்தார்.
அப்போது திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்ற குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரன் மற்றும் மாநிலப் பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் தயா சங்கர் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.
மேலும், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை முன்னீர்பள்ளம் ஊராட்சி புதுக்கிராமத்தில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள், வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியிருந்தது. விவசாயிகளை சந்தித்து நிவாரணம் மற்றும் இழப்பீடுக்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.