நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 18-ம் தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சையில் உடல்நலம் தேறிய நிலையில், கடந்த 11-ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்கிடையில் விஜயகாந்த் கடந்த 26ம் தேதி இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தே.மு.தி.க தலைமை அலுவலக செய்திக் குறிப்பு தெரிவித்தது.
மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தே.மு.தி.க. தலைமை அலுவலகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி இன்று ( 28.12.2023 ) காலமானார்.
இதையடுத்து அவரது உடல், மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு சிறிது நேரம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விஜயகாந்தின் உடல் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு தேமுதிக அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவரது மறைவுக்கு ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரை உலகப் பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள் என அங்கு முக்கிய நபர்கள் மற்றும் பொது மக்கள் குவிந்து வருகின்றனர். ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.