திருச்சியில் ஸ்வச் பாரத் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பாக தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் கலந்து கொள்ள முன்வருபவர்கள் வரலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்;
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், வரும் ஜனவரி 2, 2024 அன்று, ரூ.1,200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளத் தமிழகம் வருகை தரவுள்ளார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமாக நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள், சுகாதாரம் அடிப்படை தேவைகளில் ஒன்று என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.
மாண்புமிகு பிரதமர் அவர்கள் வருகையையொட்டி, தமிழக பாஜக சார்பாக, ஸ்வச் பாரத் -தூய்மை இந்தியா திட்டத்தினை எதிரொலிக்கும் வண்ணம் நேற்று முதல் தூய்மை பணிகளை துவங்கிவிட்டோம். வரும் ஜனவரி 2, 2024 அன்று காலை 6 முதல் 8 மணி வரையில், தூய்மை இந்தியா திட்டத்தினை எதிரொலிக்கும் வண்ணம், திருச்சி மாநகரத்தையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் சுத்தம் செய்யும் மாபெரும் தூய்மை பணி, நடைபெறவிருக்கிறது.
2ஆம் தேதி தொடங்கி நமோ செயலியை ஒரு சிறப்பு திட்டமாக நமது மாநிலம் முழுவதும் எடுத்துச் சென்று அதன் பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தமிழக பாஜக முன்னெடுக்கவுள்ளது.
இரண்டாவது கட்டமாக, பொங்கல் திருநாளுக்கு பிறகு, மழையால் பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்கள் முழுவதிலும் இந்த தூய்மைப் பணி தொடரவிருக்கிறது. அதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
திருச்சி மாநகரத்தையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் சுத்தம் செய்யும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்களும், பொதுமக்களும், https://docs.google.com/forms/d/1bGIQJ என்ற இணையதளத்தில் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.