சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மத்திய அரசு சார்பில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் நேற்று (28.12.2023) காலை தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மூத்த அமைச்சர்கள் என அனைவரும் இரங்கலை தெரிவித்தனர். விஜயகாந்தின் புகழை நினைவுகூர்ந்தனர். அதே போன்று மத்திய அரசு சார்பில் நேரில் அஞ்சலி செலுத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதன்படி சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாருமான பிரேமலதா, அவரின் மகன்கள் உள்ளிட்டோருக்கு அவர் ஆறுதல் கூறினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், மக்களுக்கு உதவக்கூடிய நல்ல தலைவரை இழந்துவிட்டதாக தெரிவித்தார்.
விஜயகாந்த் மறைவு செய்தியறிந்து பிரதமர் மோடி மிகவும் வருத்தமடைந்ததாகவும், அந்த துக்கத்தில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் தம்மை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார். தற்போது பிரதமர் சார்பாகவும், மத்திய அரசு சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
விஜயகாந்த் இளகிய மனம் படைத்தவர். தனக்கு கிடைக்கும் வசதிகள், தன்னுடன் இருப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தவர்.
துன்பத்தை உணர்ந்த மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியை பார்ப்பது அரிது, விஜயகாந்த் நம்மிடம் இல்லை. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது துக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். மனித நேயம் மிக சிறந்த அரசியல் தலைவரை இழந்து விட்டோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
அதே போன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோரும் விஜயகாந்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலியை செலுத்தினர்.