மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடலுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் அஞ்சலி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை தொடர்ந்து, சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 28) அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: இந்த சோகமான சூழ்நிலையில் நாம் அனைவரும் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அதன் நிறுவனத் தலைவர், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்மோடு இல்லை. அலுவலகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்துள்ளோம்.

மிகப்பெரிய மனிதர் எந்த குறை இருந்தாலும் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துவிட்டு நம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சினிமாத்துறையில் யாரெல்லாம் சாதிக்க முடியாது என்று சொன்னார்களோ, மாநிறம் இருப்பவர்களுக்கு இடம் இல்லை என்று சொன்னார்களோ அதனை உடைத்துக்காட்டி சினிமாத்துறையில் முத்திரை பதித்தவர். தென்னிந்தியா சினிமாத்துறையில் முக்கியப்புள்ளியாக இருந்து தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என எல்லாத்துறையிலும் கோலோச்சினார்.

அதன் பின் அரசியலுக்கு வந்து இருபெரும் துருவங்கள் இருக்கும்போது மூன்றாவது ஒரு மனிதனுக்கு இடம் இருக்கிறது என்பதை நமக்கு காட்டி, ஏழைகளின் குரலாக இருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்மோடு இன்று இல்லை.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது இரங்கல் செய்தியை இன்று காலை முகநூல் வாயிலாக பதிவிட்டிருந்தார். அதே போன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த அமைச்சர்கள் என அனைவரும் கேப்டன் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும் 2014ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் கேப்டன் விஜயகாந்த் இருந்தார் என்ற பழைய நினைவுகளையும் அனைவரும் நினைவுகூர்ந்தனர்.

உண்மையாலும் மாநில பாஜக இரண்டு கரம் கூப்பி மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். இந்த அலுவலகத்தில் தமிழகத்தின் ஒரு முக்கியப்புள்ளி உள்ளார். அவருக்கு எந்த விதத்தில் தமிழக அரசும், நாமும் செய்ய வேண்டிய மரியாதை செய்யும் கடமையில் இருந்து தவறியிருக்கிறோம்.

அலுவலகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் வெளியே உள்ளனர். கேப்டன் விஜயகாந்திற்கு மக்கள் கஷ்டப்பட்டு அலுவலகத்தின் உள்ளே வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
தமிழகத்தில் உள்ள தேமுதிக ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். தமிழக அரசு உடனடியாக கேப்டன் விஜயகாந்த் அவரின் உடலை குடும்பத்தின் அனுமதியோடு ராஜாஜி அரங்கத்திற்கு எடுத்துச்சென்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக வைக்க வேண்டும் என்பது எங்களின் அன்பான வேண்டுகோள் ஆகும்.

நாளை (29.12.2023) பெரிய அளவில் மக்கள் கூட்டம் வர உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால் தவறாகி போய்விடும். எனவே மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதை பரிசீலனை செய்து ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதற்கு அரசு முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.

அதே போன்று கேப்டன் விஜயகாந்த் அவர்களை பொறுத்தவரையில் எதிர்க்கட்சித்தலைவரை தாண்டி நடிகர் என்பதையும் தாண்டி தமிழக மக்களிடம் இருக்கக்கூடிய பெரிய தலைவர். எனவே அவருக்கு அரசு வழங்கக்கூடிய இடத்தில் காலம், காலமாக எல்லோரும் பார்ப்பதற்கு ஏதுவாக அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்து அதில் மணி மண்டபம் கட்டுவதற்கு முன்வர வேண்டும் என்பது பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கை ஆகும்.

நாளை நமது மத்திய அரசின் சார்பாக, கட்சியின் சார்பாக மூத்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வர உள்ளனர். இந்த நேரத்தில் இந்த ஒரு வேண்டுகோளை மட்டும் வைக்கிறோம். உடனடியாக விஜயகாந்த் அவர்களின் உடலை ராஜாஜி அரங்கத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். நிலைமை மோசமாக உள்ளது. முதல்வர் அவர்கள் கனிவோடு பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top