பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலில் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஜனவரி 19) குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து, தூய்மை பணியில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
அயோத்தியில் வரும் ஜனவரி 22 அன்று, பகவான் ஸ்ரீராமரின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்ய அறிவுறுத்தியதை அடுத்து, இன்றைய தினம் காலை, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் திருக்கோவிலில், தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டோம்.
மேலும் இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு, தமிழக பாஜக சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என 5,000 வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். தமிழக பாஜக சகோதர சகோதரிகள் இந்த இறைபணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.