தமிழகத்தில் அரசுப் பணிகளுக்காக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 3ஏ, குரூப் 4 மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதி, சுமார் முப்பது லட்சம் தமிழகப் பட்டதாரி இளைஞர்கள், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நிலை உருவாகியிருப்பதாக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் நேற்று மாலை (ஜனவரி 26) என் மண் என் மக்கள் பயணம் நடைபெற்றது. தலைவர் அண்ணாமலை பொது மக்களை சந்தித்து மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய பிரசுரங்களை வழங்கினார். மத்திய அரசு நெய்வேலி தொகுதியில் செய்துள்ள நலத்திட்டப் பணிகள் குறித்தும் பேசினார்.
இந்த நிலையில், என் மண் என் மக்கள் பயணம் பற்றி தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
திருச்சிற்றம்பலமுடையான் நடராஜர் கோவில் அமைந்திருக்கும் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில், பொதுமக்கள் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. 10 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட 2420 கிலோ நடராஜர் சிலை அமைந்திருக்கும் திருக்கோவில். வேலோடு அருள் பாலிக்கும் முருகப்பெருமான், நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோவிலில், கையில் வில்லோடு அருள்பாலிக்கிறார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களது சீரிய முயற்சியால் 1957ஆம் உருவான நிறுவனம் மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (பழுப்பு நிலக்கரி நிறுவனம்). நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழகத்திற்கும், மீதம் 50% அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
கடந்த 1989 முதல் 2023 வரை, இப்பகுதி மக்களுக்கு, நிரந்தர வேலை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், மத்திய அரசுக்கு நான் எழுதிய கடிதத்தில், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஒரு புதிய இடஒதுக்கீடு முறையை என்.எல்.சி. நிறுவனம் அறிமுகப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அடுத்த 4 ஆண்டுகளில் காலியாகும், 4,036 பணியிடங்களில், நிலம் கொடுத்த உரிமையாளர்களை பணி அமர்த்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு, தமிழக பாஜக துணை நிற்கிறது.
வேலை வேண்டாம் என்பவர்களுக்கு, வாழ்வாதாரமாக தற்போது வழங்கும் தொகையை 17 லட்சத்திலிருந்து, 35 லட்சமாக, இரட்டிப்பாக்கி தர வேண்டும். என்ற மக்களின் கோரிக்கையை என்.எல்.சி., நிறுவனம் உடனடியாக பரிசீலித்து நடைமுறைப்படுத்தவேண்டும். 1989 முதல் 2023 இன்று வரை நிலத்திற்கு ஒரு தவணை மற்றும் எந்தவித பணமும் வாங்காமல் இருப்பவர்களுக்கு, தற்போது உள்ள சந்தை மதிப்பு நிலவரப்படியும், புதிதாக நிலம் கையகப்படுத்தும் போது மத்திய அரசு கொடுத்துள்ள வழிமுறைப்படி 90 சதவீதம் நிலம் உரிமையாளர்களின் ஒப்புதல் படியும் இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும்.
1989 முதல் 2023 இன்று வரை நிலத்திற்கு பணம் வாங்கி என்.எல்.சி.,-ஆல் இன்று வரை மாற்று இடம் வழங்காமல், வேலையும் வழங்காமல் உள்ளவர்களுக்கு. மத்திய அரசின் புதிய நிலம் கையகப்படுத்தும் வழிமுறைகளின் படி இழப்பீடு தொகை வழங்க வேண்டும். மும்முடிச் சோழகன், கத்தாழை உள்ளிட்ட கிராமங்களில், 23 ஆண்டுகளாக பட்டா பெயர் மாற்றத்திற்கு என்.எல்.சி. நிறுவனம் தடை விதித்துள்ளதால், வங்கிகளில் விவசாயத்திற்காக கடனுதவியோ, மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்களான, மானிய விலையில் விவசாய உபகரணங்கள், டிராக்டர், அரசாங்கத்திடம் கிடைக்கும் யூரியா மற்றும் நம் பாரத பிரதமர் விவசாயிகளுக்காக வழங்கும் பிஎம் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு 6000 கூட கிடைக்காத சூழ்நிலையில் இருக்கிறார்கள். எனவே, விவசாயிகளுக்குத் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று என்.எல்.சி., நிறுவனத்தை தமிழக பாஜக வலியுறுத்தும்.
என்.எல்.சி., மனை சென்ட் ஒன்றிற்கு ரூ.40,000 மட்டுமே வழங்குகிறது. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டப்படி சந்தை மதிப்பீட்டில் குறைந்த மதிப்பு சென்ட் ஒன்றிற்கு 1 லட்சம் வழங்க வேண்டும். மக்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை என்.எல்.சி., நிறுவனம் நிறைவேற்றவேண்டும். அதற்கு, தமிழக பாஜக மக்களுடன் துணை நிற்கும்.
தமிழகத்தில் அரசுப் பணிகளுக்காக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 3ஏ, குரூப் 4 மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதி, சுமார் முப்பது லட்சம் தமிழகப் பட்டதாரி இளைஞர்கள், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு சரியான நேரத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்காமல், பணி நியமனமும் செய்யாமல் காத்திருக்க வைத்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் மூன்று லட்சம் அரசு வேலை உருவாக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, இதுவரை பத்தில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. எந்தத் தகுதியுமே இல்லாமல், ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தினால் அதிகாரத்தில் இருக்கும் திமுகவினருக்கு, தமிழக பட்டதாரி இளைஞர்களின் வலி எப்படிப் புரியும்?
பெண்களுக்கு, இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு என எந்தத் திட்டங்களையும் கொண்டு வராமல், கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் மறைந்த திமுக தலைவர்களுக்கு நினைவுச் சின்னம் கட்டுவதிலும், பேருந்து நிலையங்களுக்குப் பெயர் வைப்பதிலும் மட்டுமே திமுக மும்முரமாக இருக்கிறது.
தமிழகத்தில் இந்த குடும்ப அரசியல், ஊழல் அரசியல் ஒழிய வேண்டும். மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றம் வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், கடந்த பத்து ஆண்டுகளாக, ஊழலற்ற, நேர்மையான நல்லாட்சி வழங்கி வருகிறார். தமிழகத்தில் தூயதோர் அரசியலை, பாஜக மட்டுமே முன்னெடுக்கிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்தும் வகையில், பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், தமிழக மக்களின் பிரச்சினைகளை, தமிழக பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் எடுத்துக் கூறி, அவற்றிற்கான தீர்வுகளைக் கொண்டு வருவார்கள் என்பது உறுதி. இவ்வாறு தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.