மதுரை தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டதை விட மிக துணிகரமான செயல் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரவு தாக்குதல் சம்பவம் என தமிழக பாஜக தொழில்பிரிவு துணைத்தலைவர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்;
திமுகவிற்கு சொம்படிக்கும் ஊடகவியலாளர்கள் மட்டுமே நல்லவர்கள் என்ற பெயருடன் சொகுசாக வாழ முடியும்.
அரசுக்கு எதிரான செய்திகளை சமூக பொறுப்புடன் நேர்மையாக வெளி கொண்டுவரும் ஊடகவியலாளர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கு உடல் முழுக்க 62 வெட்டு பட்டு, கை, கால்கள் துண்டாகி மீண்டும் ஒட்ட வைக்கபட்டு வென்டிலேட்டரில் உயிருக்கு போராடி வரும் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபுவே சாட்சி. கடந்த கால திமுக ஆட்சியில் 2007ல் மதுரை தினகரன் பத்திரிக்கை எப்படி கொழுத்தபட்டதோ அதைவிட துணிகரமான செயல் இது.
கொலைவெறி தாக்குதல் நடந்த இடம் இருட்டான ஒதுக்குபுரம் அல்ல, பல்லடம்-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்குள் மின்சாரம் வெளிச்சத்தில் கேமரா முன்னிலையில் நடந்துள்ளது.
கொலை முயற்சி நடத்தியவர்கள் மாஸ்க் கூட அணிந்திருக்கவில்லை. அவ்வளவு துணிச்சல்!.
கேமரா இருக்கும் இடமே பாதுகாப்பு என நினைத்து தன்னுடைய வீட்டை விட்டு பெட்ரோல் பங்க்கிற்கு ஓடி வந்த நேச பிரபுவை அங்கேயே வைத்து வெட்டியிருக்கிறார்கள். கழுத்திற்கு வந்த வெட்டை கையில் தடுத்திருக்காவிட்டால் இன்று அஞ்சலி செலுத்தியிருப்போம். துண்டான கைகள் அறுவை சிகிச்சையின் மூலம் மீண்டும் ஒட்ட வைக்கபட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் எப்படி கொடுரமாக கொலை செய்யபட்டார்களோ அதே முறையில் நேசபிரபும் தாக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம் கோவை கங்கா மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நேசபிரபுவை நேரில் சென்று பார்த்தோம். அங்கு கூடியிருந்த இருந்த அவருடைய உறவினர்களிடம் உரையாடியதில் நமக்கு கிடைத்த அதிர்ச்சிகரமான தகவல்கள் இங்கே.
கடந்த செப்டம்பர் மாதம் பல்லடத்தில் நடந்த நான்கு படுகொலைகள் முதல் ஆளாக தெளிவாக கொண்டு வந்தவர் நேசபிரபு, மேலும் கொலையாளிகள் கைது செய்யபடும் வரை விடாமல் பாலோ செய்து வந்தவர். கொலைக்கு முக்கிய ஆதாரமான சிசிடீவி காட்சிகளை வெளியிட்டதும் நேசபிரபுதான்.
எந்த டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கி குடித்துவிட்டு படுகொலை செய்தார்களோ அந்த கடை மீண்டும் திறந்த போது அதை எதிர்த்த முதல் நபரும் இவர்தான்!
செந்தில் பாலாஜி சாராய துறை அமைச்சராக இருக்கும் பொழுதே மிகவும் துணிச்சலுடன் திமுக ஆதரவு பிரமுகர் சட்டவிரோதமாக நடத்தி வந்த பார் பற்றிய தகவல்களை வெளி கொண்டு வந்து அதை மூட வைத்தவர். அந்த பார் இன்று வரை திறக்கபடவில்லை
திருப்பூர் எம்.எல்.ஏ., செல்வராஜிடம் சட்டமன்ற கூடுதல் செயலாளர் மன்னிப்பு கேட்ட விடியோவை வெளியிட்டதும் இவர்தான்.
1300 மாணவிகள் படித்து வரும் பல்லடம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மது அருந்திய நபர்களை பற்றிய செய்திகளை வெளி கொண்டு வந்தது இவர்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.