தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றி வைத்துள்ள திமுக: கள்ளக்குறிச்சியில் தலைவர் அண்ணாமலை!

திரும்பும் இடம் எல்லாம் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து, தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றி வைத்திருக்கும் திமுக அரசு என கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பயணத்தில் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

விவசாய பூமியான கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில், தமிழகத்தில் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு, பெரும் திரளெனக் கூடி ஆதரவளித்த பொதுமக்கள் அன்பால் சிறப்புற்றது.

கள்ளக்குறிச்சி தொகுதியில், தியாகதுருகம், மாமனந்தல், அகர கொட்டாளம், மலைக்கொட்டாளம் கிராமங்களில் சுமார் 15,000 ஏக்கரில் மஞ்சள் சாகுபடி நடைபெறுகிறது. ஒரு ஆண்டுக்கு 362 மெட்ரிக் டன் மஞ்சள், இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மஞ்சள் விவசாயத்திற்குப் புத்துயிர் கொடுக்க, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய மஞ்சள் வாரியம் அமைத்தார். புகழ்பெற்ற கள்ளக்குறிச்சி மரச்சிற்பங்களுக்கு, நமது பிரதமர் அவர்கள், கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், புவிசார் குறியீடு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார். பசுமையான, நெல் வயல்கள், கரும்புத் தோட்டம், மரவள்ளிக் கிழங்கு சாகுபடி, பருத்தி சாகுபடி என பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்யப்படும் பசுமையான விவசாய பூமி கள்ளக்குறிச்சியில் மட்டும், 1,81,648 விவசாயிகளுக்கு, பிஎம் கிசான் நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய் என இதுவரை 30,000 ரூபாய் மத்திய அரசால் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பாரதப் பிரதமர் வழங்கிய 11 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 50,030 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,51,824 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,74,938 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 66,512 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,97,714 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட முத்ரா கடன் உதவி 512 கோடி ரூபாய் என மத்திய அரசின் நலத்திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பலனடைந்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டுக்கான தமிழகப் பள்ளிகளுக்கான மத்திய தணிக்கை அறிக்கையில், தமிழகத்தில் 11,711 வகுப்பறைகள் குறைவாக இருப்பதால், பள்ளிகள், மரத்தடிகளிலும், மேற்கூரை இல்லாத வெட்டவெளிகளிலும், ஆய்வுக் கூடங்களிலும் நடக்கிறது என்பது தெரிய வந்துள்ளது., 5 கிமீ தொலைவுக்கு ஒரு உயர் நிலைப் பள்ளி, 8 கிமீ தொலைவுக்கு ஒரு மேல் நிலைப் பள்ளி இருக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, 2,133 இடங்களில் உயர் நிலைப் பள்ளிகள், 1,926 இடங்களில் மேல்நிலைப் பள்ளிகள் இல்லை. 108 பள்ளிகளை ஆய்வு செய்ததில், 38 பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லை. அல்லது இடிந்த நிலையில் இருக்கிறது. இதுதான் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், PM Shri என்ற திட்டத்தை, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்தின்படி, இந்தியாவில் 14,500 பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 18,128 கோடி ரூபாய் நமது மத்திய அரசு செலவு செய்யவுள்ளது. உலகத்தரம் வாய்ந்த அரசுப் பள்ளிகளை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். ஆந்திர பிரதேச மாநிலத்தில் 662 பள்ளிகள், கர்நாடகா மாநிலத்தில் 129 பள்ளிகள். தெலுங்கானா மாநிலத்தில் 543 பள்ளிகள் என அனைத்து மாநிலங்களும், தங்கள் மாநிலத்தின் குழந்தைகள் நலனுக்காக, PM Shri பள்ளிகள் ஒதுக்கீடு பெற்றுக் கொண்டனர். ஆனால் திமுக அரசு, மத்திய அரசிடம் ஒரு பள்ளிகளைக் கூடக் கேட்டுப் பெறவில்லை. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளின் வருமானத்துக்காக, தமிழக ஏழை எளிய குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம், தொழிற்பேட்டை அமைக்கப்படும். அரசு பொறியியல் கல்லூரி, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தல், பாதாள சாக்கடை திட்டம் என திமுக கொடுத்த ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார் முதலமைச்சர்.

வரும் பாராளுமன்றத் தேர்தல், மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கும், குடும்ப அரசியலுக்கும் இடையேயான தேர்தல். நேர்மையான நல்லாட்சிக்கும், ஊழல் கட்சிக் கூட்டணிக்கும் இடையேயான தேர்தல். கல்வித் திட்டங்களைக் கொண்டு வந்து, நம் குழந்தைகளை முன்னேற்றும் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும், திரும்பும் இடம் எல்லாம் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து, தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றி வைத்திருக்கும் திமுக கூட்டணிக்கும் இடையேயான தேர்தல். உலகப் பொருளாதாரத்தில், 11வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றியிருக்கும் நமது அன்புக்குரிய பிரதமருக்கும், நாட்டிலேயே அதிகக் கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்றி வைத்திருக்கும் ஊழல் திமுக கூட்டணிக்கும் இடையேயான தேர்தல்.

நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். தேசத்தின் முன்னேற்றத்திற்குத் துணை நிற்போம். இவ்வாறு தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top