வாரணாசியைப் போல 1,000 கோடி நிதி ஒதுக்கி திருவண்ணாமலையை மாற்றிக் காட்டுவோம். திருவண்ணாமலையும் முன்னேற, பாஜக பாராளுமன்ற உறுப்பினர் நிச்சயம் வேண்டும் என நேற்று மாலை (ஜனவரி 30) நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பயணத்தில் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் தலைவர் அண்ணாமலை உரையாற்றியதாவது:
சனாதன தர்மத்தைக் காக்கும் புண்ணிய பூமி, பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகிய திருவண்ணாமலை மண்ணில், பெரும் எழுச்சியுடன் கூடிய பொதுமக்களின் உற்சாக ஆரவாரத்துடன் வெகு சிறப்பாக தொடங்கியுள்ளது. காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்ற சொல், திருவண்ணாமலையின் பெருமையைக் கூறும். சக்தி படைத்த சித்தர்கள், ரமண மகரிஷி, விசிறி சாமியார், யோகி ராம்சுரத்குமார் என ஆன்மீகப் பெரியோர்கள் நம்மை ஆசிர்வதிக்கும் பகுதி. பெருந்தலைவர் காமராஜர் அவர்களால், 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சாத்தனூர் அணையின் மூலம், 8,000 ஹெக்டேரில் கரும்பு, 5,000 ஹெக்டேர் அளவிற்கு உளுந்து, 3,500 ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடி நடைபெறும் விவசாய பூமி.
அநியாயமும் அராஜகமும் திமுகவினர் ரத்தத்தில் ஊறியிருப்பது. கடந்த ஆண்டு, தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் என்பவர் தன் குடும்பத்துடன், நீண்ட நேரம் உண்ணாமுலையம்மன் கருவறை முன்பு நின்று கொண்டிருந்ததால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ஒதுங்கி நிற்குமாறு கூறிய பெண் ஆய்வாளரை, கோயில் நிர்வாகமே தங்களிடம்தான் இருக்கிறது என்று கூறி அடித்து இருக்கிறார். இது சம்மந்தமாக தமிழக பாஜக குரல் கொடுத்த பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது ஜாமீன் மனு மூன்று முறை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டும், இன்று வரை கைது செய்யவிடாமல் காவல்துறையினரின் கைகளை கட்டிப்போட்டுவைத்திருக்கிறார்கள். தங்கள் சகோதரிக்கு நியாயம் கிடைக்க, திருவண்ணாமலை காவல்துறையினரால் எதுவும் செய்யமுடியவில்லை என்பது வேதனைக்குரியது.
சனாதனத்தை அழிப்போம் என்று சொல்லும் திமுகவினருக்கு, திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள் எழுச்சி கண்ணை உறுத்திக்கொண்டே இருக்கிறது. திருவண்ணாமலை செங்கம் சாலையில், ஆணாய்பிறந்தான் கிராமத்தில், கார் நிற்கவைக்க இடம் தேவை என்பதற்காக, காட்டு சிவா சுவாமிகளுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உள்ள 13 ஜீவ சமாதிகளையும் குடிநீர் கிணற்றையும் இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டது இந்த ஹிந்து விரோத திமுக அரசு.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது நமது நம்பிக்கை. திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரத்தை மறைக்கும் வகையில், வணிக வளாகம் கட்டுவதற்காக, கோவிலின் மூலதன நிதியில் இருந்து, 6.4 கோடி ரூபாயை எடுத்துள்ளது திமுக அரசு. கோவில் மூலதன நிதியை, எந்த காரியத்துக்காகவும் எடுக்க, யாருக்கும் அனுமதி கிடையாது. இது தான் அறநிலையத்துறை சட்டம். ஆனாலும் கோவிலில் ராஜகோபத்திற்கு எதிரே கோவிலை மறைத்து ஒரு வணிக வளாகம் கட்ட முற்பட்டது திமுக. தன்னார்வலர்கள் மற்றும் பாஜகவினர் மேற்கொண்ட முயற்சியினால், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இதற்கு தடை விதித்து விட்டது.
சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் தற்போது கல்வித் தந்தையாகிவிட்டார்கள். திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஏழை, எளிய மாணவர்களுக்கு, அரசுப் பள்ளிகளில் தரமற்ற கல்வியைக் கொடுத்து, அவர்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள். மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வி அமைச்சர். அவருக்கு ஏழை மாணவர்களுக்கான கல்வித் தேவைகள் புரிய வாய்ப்பில்லை. இந்தியா முழுவதுமே மாநில அரசுகள், மத்திய அரசின் இலவசக் கல்வி வழங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கேட்கும்போது, தமிழக அரசு புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை வேண்டாம் என்கிறது.
மத்திய அரசின் உலகத் தரம் வாய்ந்த, மாணவர்களுக்கு, கல்வி, சீருடை, உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கும் நவோதயா பள்ளிகளுக்கு திமுக அரசு அனுமதி கொடுத்தால், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நவோதயா பள்ளிகளைக் கொண்டு வர பாஜக முயற்சிகள் எடுக்கும். அமைச்சர் எ.வ.வேலு லட்சக் கணக்கில் கட்டணம் வசூலித்து நடத்தி வரும் பள்ளிகளின் கல்வித் தரத்துக்கும், நவோதயா பள்ளிகளின் கல்வித் தரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை பரிசோதித்து, எது குழந்தைகளுக்குத் தேவையானது என்று முடிவெடுக்கலாம். நவோதயா பள்ளிகளில் உலகத் தரத்திலான இலவசக் கல்வி பெறும் மாணவர்கள் இன்று உலக அளவிலான போட்டித் தேர்வுகள் அனைத்திலும் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற கல்வி வழங்கும் திமுக அரசு, நீட் தேர்வை வைத்து நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
ஐம்பது ஆண்டுகளில், ஐந்து முறை ஆட்சியில் இருந்த திமுக தொடங்கிய அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை வெறும் 5. ஆனால் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 17. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக நடத்திக் கொண்டிருக்கும் நாடகம்தான் தான் நீட் அரசியல். கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்துக்கு வழங்கியுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் 15. ஒரு புறம் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிப்பதோடு, நீட் தேர்வு மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வியை உறுதி செய்திருக்கிறார் நமது பிரதமர்.
திமுகவின் ஏடிஎம்மாக இருக்கிறார் அமைச்சர் வேலு. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பதற்கு உதாரணமாக, காவி வேட்டி கட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர் பாபு. பிராமணர்கள் அல்லாதோர் கருவறைக்குச் செல்ல வேண்டும் என்று ஆறு மாதத்திற்கு முன்பு பேசிய திருமாவளவன், இப்போது, பிராமணர் அல்லாத பிரதமர் மோடி அவர்கள் எப்படி ராமர் கோவில் கருவறைக்குச் செல்லலாம் என்று மாற்றிப் பேசுகிறார்.
நமது நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதைப் போல, உலகின் 19 நாடுகளின் உயரிய விருதுகள் நமது பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 8 விருதுகள், இஸ்லாமிய நாடுகளின் உயரிய விருதுகள். நமது பிரதமர் மோடி அவர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தலைவன். 500 ஆண்டுகள் காத்திருப்பான, பல கோடி மக்களின் கனவும் எதிர்பார்ப்புமாக இருந்த ராமர் கோவில் இன்று நனவாகியிருக்கிறது. பிரதமரின் வாரணாசி தொகுதி, இன்று உலகின் ஆன்மீகத் தலைநகரமாக இருக்கிறது. அயோத்தியில் வரும் ஆண்டில் 25,000 கோடி வருவாய் ராமர் கோவில் மூலமாக கிடைக்கும். அயோத்திக்கோ, வாரணாசிக்கோ சற்றும் குறைந்ததல்ல நமது திருவண்ணாமலை. தமிழகத்தில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது, திருவண்ணாமலையையும், கோவில்கள் நிறைந்த ஆன்மீக பூமியான தமிழகத்தையும், ஆன்மீகத்தின் தலைநகராக மாற்றிக் காட்டுவோம். வாரணாசியைப் போல 1,000 கோடி நிதி ஒதுக்கி திருவண்ணாமலையை மாற்றிக் காட்டுவோம். திருவண்ணாமலையும் முன்னேற, பாஜக பாராளுமன்ற உறுப்பினர் நிச்சயம் வேண்டும்.
இந்த 2024 ஆம் ஆண்டு நம்முடைய ஆண்டு. நாம் புதிய காலச்சக்கரத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம். வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். யுகத்திற்கான தலைவன், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவரது கரங்களை வலுப்படுத்த, தமிழகத்தின் அனைத்துப் பாராளுமன்றத் தொகுதிகளில் இருந்தும் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். தமிழக மக்களின் பல தலைமுறை எதிர்பார்ப்பான நேர்மையான, ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவோம். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.