இ.ண்.டி. கூட்டணியில் இடம் பெற்றிருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பிடிக்காமல் ஒவ்வொருவராக விலகி வருகின்றனர். ஏற்கனவே பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் விலகினார். இதன் பின்னர் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என மம்தா பானர்ஜியும் அறிவித்தார்.
மேலும் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் சீட் ஒதுக்கும் பிரச்னையில், இரண்டு தொகுதிகளை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்குவோம் என்றும், இதற்கு முந்தைய 2019 தேர்தல் மற்றும் 2021 மேற்குவங்க சட்டசபை தேர்தலில் குறைவான வாக்குகள் மட்டுமே காங்கிரஸ் பெற்றதால் அதிகப்படியான சீட்டுகள் ஒதுக்க முடியாது என்று மம்தா திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கருத்து மோதல் முற்றிய நிலையில், “நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து தனித்து நின்று களம் காண்போம். தேர்தல் நேரத்தில் மட்டுமே குரல் எழுப்புவது சில கட்சிகளின் வாடிக்கையாக உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எந்தக் கட்சியுடனும் இணையவில்லை. எனினும், திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராடும் என்றார்.
சட்டசபையில் ஒரு இடம் கூட இல்லாத நிலையிலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு ஏதோ போனால் போகட்டும் என்று இரண்டு எம்.பி. சீட் தருவதாக கூறினோம். அத்துடன் அவர்களுடைய வெற்றிக்கு உதவுவதாகவும் சொன்னோம். அவர்கள் எங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். தங்களுக்கு அதிக இடங்கள் வேண்டும் எனக் கேட்டனர். இதனால் அவர்களது கோரிக்கையை நிராகரித்தோம். எனவே மேற்குவங்கத்தில் ஒரு சீட் கூட கொடுக்க முடியாது என்றார்.
இந்த நிலையில், காங்கிரஸிலிருந்து விலகிய நிலையில், முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 300 இடங்களில் போட்டியிட்டால், 40 இடங்களை கூட வெல்வார்களா என்று தெரியவில்லை. ஆனாலும் ஏன் உங்களுக்கு இவ்வளவு திமிர்? உங்களுக்கு உண்மையில் தைரியம் இருந்தால் வாரணாசியில் பாஜகவை தோற்கடித்து காட்டுங்கள். ஆனால் உங்களால் முன்பு வெற்றி பெற்ற இடங்களில் கூட தோல்விதான் அடைய முடிகிறது.
உங்களால் ராஜஸ்தானில் வெல்லமுடியவில்லை, முடிந்தால் அங்குசென்று வெல்ல முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது என்பதை நான் பார்க்கிறேன். அலகாபாத்தில் போய் வெற்றி பெறுங்கள், வாரணாசியில் வெற்றி பெறுங்கள். நீங்கள் அந்தளவு தைரியமான கட்சியா என்று பார்ப்போம்! என்று கடுமையாக விமர்சித்தார்.
அழிந்து வரும் காங்கிரஸ் கட்சியை நம்பி யாரும் கூட்டணி சேர மாட்டார்கள் என்பது ஊரறிந்த உண்மை. இதனை தற்போது உணர்ந்த மம்தா, காங்கிரஸை விமர்சிக்க தொடங்கியுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இ.ண்.டி. கூட்டணியே காணாமல் போய்விடும் என பாஜக ஆரம்பம் முதலே விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.