திமுக அரசு இந்து மதத்திற்கு எதிரானது எனவும், தான் கூறியது உண்மை தான் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டியளித்தார். நியூஸ் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி உடனான கலந்துரையாடலில் பட்ஜெட் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா பகிர்ந்துகொண்டார்.
தமிழ்நாட்டில் பாஜக தற்போது தான் வளர்ந்து வருவதாக குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாஜகவை மக்கள் அங்கிகரிப்பதாக கூறினார்.
நாட்டின் அனைத்து மொழிகளையும் விரும்புபவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கையில், பாஜகவை இந்தி கட்சி என்று எதிர்க்கட்சிகள் எப்படி கூற முடியும்? என கேள்வி எழுப்பினார்.
நாட்டில் நிறைய நிறுவனங்கள் தொடங்கப்படுவதால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் நிலையில், அதனடிப்படையில் வேலைவாய்ப்பை கணக்கிட வேண்டும் என்றார். தனியார் பங்களிப்பை மத்திய அரசு பெரும் அளவில் ஊக்குவிப்பதாக கூறிய நிர்மலா, மத்திய அரசுக்கு என்று எந்த ஒரு துறையும் தனியாக இருக்காது என்றார்.
மத்திய அரசு மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் அளிக்க தயாராக இருப்பதாகவும், அந்த கடனை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது மாநில அரசுகளின் முடிவு என்றார். இத்திட்டத்தை பல மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறினார்.
கடந்த ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவை கோவில்களில் நேரலையில் காண்பதற்கு தமிழக பாஜக ஏற்பாடு செய்தது. அதற்கு திமுக அரசு தடை போட்டது. இதன் பின்னர் நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டையை நேரலையில் பார்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது பல்வேறு இடையூறுகளை திமுக அரசு ஏற்படுத்தியது. அப்போது செய்தியாளர்களிடம் திமுக ஹிந்து விரோத அரசாக செயல்படுவதாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.