வாஜ்பாய் அவர்களால் கொண்டுவரப்பட்டது கிராம சாலைகள் திட்டம்: திமுகவிற்கு, தலைவர் அண்ணாமலை பதிலடி!

அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களால் 2000 ஆம் கொண்டு வரப்பட்டதுதான், கிராம சாலைகள் திட்டம் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்திற்கும், தமிழக அரசு கூறியுள்ள கிராம சாலைகள் திட்டத்திற்கும் வித்தியாசம் என்ற பெயரில் ஒரு அரிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது தமிழக அரசின் உண்மை (?) கண்டறியும் குழு.

பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், கடந்த 2000 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர், பாரத ரத்னா வாஜ்பாய் அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டம். குக்கிராமங்களுக்கும், மலைக்கிராமங்களுக்கும், தார் சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்தில் செலவிட்ட நிதி ரூ.5,837 கோடி. எனினும், திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மலைக் கிராமங்களில் சாலை வசதிகள் இல்லாமல் ,மருத்துவச் சிகிச்சைக்காக டோலி கட்டி தூக்கிக் கொண்டு வரும் அவல நிலைதான் தமிழகத்தில் இன்னும் இருக்கிறது. அப்படியானால், அதற்கு முன்பாக மத்தியில் 2004 – 2014 வரை பத்து ஆண்டுகளாக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக, தமிழகக் கிராமங்களுக்கு ஒன்றுமே செய்ததில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

திமுக அறிவித்துள்ள முதல்வரின் கிராம சாலைகள் திட்டம், கடந்த 2023 ஆம் ஆண்டுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு வரை, தமிழக கிராமங்களில் சாலை வசதிகள் அமைக்கப்படாமல் இருந்ததாகக் கூறுகிறதா திமுகவின் உண்மை அறியும் குழு? அப்படி அதற்கு முன்பாகவே கிராமங்களில் சாலை வசதிகள் அமைக்கப்பட்டிருந்தால், அவை எந்த நிதியில் மேற்கொள்ளப்பட்டன? மத்திய அரசின் நிதியிலா? அல்லது மாநில அரசின் நிதியிலா? கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நிதி வழங்குவது மத்திய அரசா? அல்லது மாநில அரசா?

இவை ஒருபுறம் இருக்க, கடந்த 18.03.2023 அன்று திமுக அரசு வெளியிட்ட அரசாணை எண் 34 ன் படி, முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 2022 – 2023 ஆம் ஆண்டிற்கு, ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையில் செலவு செய்தது, “முட்டை”. இதையும் திமுகவின் உண்மை அறியும் குழு தவறு என்று கூறுமானால், கடந்த ஆண்டு ரூ.2,300 கோடி செலவு செய்ததற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

எதற்காக வெள்ளை அறிக்கை கேட்கிறோம் என்றால், முதல்வரின் கிராம சாலைகள் என்ற திட்டத்தைப் பெயரளவில் அறிவித்து, நிதியும் ஒதுக்கீடு செய்துவிட்டு, பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் நிதியில் செயல்படுத்தப்படும் பணிகளை, நீங்கள் அறிவித்த திட்டத்தில் கணக்கு காட்டுகிறீர்களோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. எனவே, கடந்த ஆண்டு, முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2,300 கோடிக்கான வெள்ளை அறிக்கையை திமுக அரசு கண்டிப்பாக வெளியிட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு, நேரடியாக வழங்கிய நிதி 19,936 கோடி ரூபாய். அதில் செலவிட்டது போக, தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்துக்களிடம் மீதமிருக்கும் நிதி அனைத்தையும், தமிழக அரசின் கருவூலத்தில் சேர்க்கச் சொல்லி திமுக அரசு, உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிதியில்தான், பெயரளவில் கிராமங்களுக்குத் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 7 அன்று, அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் பேசும்போதே இதனைக் குறிப்பிட்டேன். இதனை ஆதாரங்களுடன் மறுக்க திமுகவின் உண்மை அறியும் குழு முன்வருமா?

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை, ஊழல் இல்லாமல், லஞ்சம் வாங்காமல், கமிஷன் அடிக்காமல், பொதுமக்களுக்குக் முழுமையாகக் கொண்டு சேர்த்தாலே, தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் உரிய பலனடைவார்கள். அதை விடுத்து, மாறுவேடம் அணிவது போல, திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி அறிவிப்பது எதற்காக என்பது, திமுகவின் அறுபதாண்டு கால வரலாறு அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top