மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான, 30 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியிலிருந்து ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு 50 கிலோ போதைப் பொருளை கடத்த முயன்ற 3 பேரை டெல்லி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். உணவு வகையிலான பவுடருடன், சூடோ பெடரின் எனப்படும் போதைப் பொருளை கலந்து நூதன முறையில் அவர்கள் கடத்த முயன்றது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இதில் முதன்மை குற்றவாளியாக, திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரான ஜாபர் சாதிக் என்பவர் ஈடுபட்டார் என்பதையும் டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுவரை வெளிநாடுகளுக்குச் சுமார் 3,500 கிலோ போதை பொருளை கடத்தியிருப்பது விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் சர்வதேச மதிப்பு 2,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் தொடர் விசாரணையாக சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு போலீசார் சீல் வைத்தனர். அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மதுரை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தியபோது, சாலமன் பிரகாஷ் என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து 30 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
திராவிட மாடல் அரசு என்று வெளியில் சொல்லிக்கொண்டு, தமிழகம் முழுவதுதையும் பொருள் விற்பனை இடமாக திமுக அரசு மாற்றி வருவது பொதுமக்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதை காண முடிகிறது. இனிமேலாவது உடனடியாக போதைப்பொருள் கடத்தும் கும்பல்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.