சென்னையில் காரில் சென்று கொண்டிருந்த, திமுக நிர்வாகி ஒருவர் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ள சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருவதாக பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், சென்னை, வண்டலூர் அருகே காரில் சென்று கொண்டிருந்த திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராவமுதன் மீது, மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது காரில் இருந்து தப்பிக்க நினைத்த ஆராவமுதனை பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தனர். மேலும், அவரது ஒரு கையை துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஆராவமுதனை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர் அவரது உடல் குரோம்பேட்டை அரசினர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலேயே தைரியமாக வெடிகுண்டை வீசுகிறார்கள் என்றால் சட்டம், ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை காட்டுகிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை.
தமிழகத்திலே தினந்தோறும், கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல் நடைபெற்று வருகிறது. தற்போது போதைப்பொருள் கடத்தல் அதிகமாகவே உள்ளது. இதனை எல்லாம் கண்டுக்கொள்ளாத முதல்வராக, மு.க.ஸ்டாலின் தமிழகத்தை ஆட்சி செய்துக்கொண்டிருக்கிறாரா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.