பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 4-ம் தேதி (4.03.2024) மீண்டும் தமிழகம் வருகிறார். சென்னையில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சி பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
வருகிற 4-ம் தேதி மதியம் 1.15 மணியளவில் மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். பிற்பகல் 2.50 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் புறப்பட்டு, பிற்பகல் 3.20 மணியளவில் கல்பாக்கம் அணுமின் நிலையம் செல்கிறார்.
பிற்பகல் 3.30மணி முதல் மாலை 4.15 மணி வரை கல்பாக்கம் அணு மின் நிலையத்தில், ‘‘பாரதிய நபிகியா வித்யுத் நிகாம்’’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மாலை 4.30 மணிக்கு கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 5 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, மாலை 5.10 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கத்தில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, 5.15 மணி முதல் 6.15 மணி வரை உரையாற்றுகிறார்.
மாலை 6.20 மணிக்கு நந்தனத்தில் இருந்து புறப்பட்டு, சாலை வழியாக சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, 6.35 மணிக்கு தெலங்கானா மாநிலம் செல்கிறார்.
ஏற்கனவே, பல்லடம் நகரில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ‘என் மண், என் மக்கள்’ நிறைவு விழாவில் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக பங்கேற்றனர். அதே போன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்ற பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அங்கு நடைபெற்ற கூட்டங்களில், லட்சக்கணக்கான பொதுமக்களும் பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டு உற்சாகமாக பிரதமர் மோடியை வரவேற்றனர்.
தற்போது மீண்டும் சென்னை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.