திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, குற்றவாளி ஜாபர் சாதிக் தமிழகத்தை தங்கள் இருப்பிடமாக மாற்றி, தங்கள் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த திமுக தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார் என தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
டெல்லியில் இருந்து தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்கள் மூலம், போதைப் பொருட்கள் நியூசிலாந்து உட்பட பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படுவதாக, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சர்வதேச அளவில் ரூ.2,000 கோடி என கூறப்படுகிறது.
இந்த கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது, சினிமா தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக 23-ம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாமல் தலைமறைவு ஆகிவிட்டார். மேலும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், ஒரு பிரபல குற்றவாளி என்பதும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் என்பதும் தற்போது அனைவரும் அறிந்த உண்மை ஆகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, 38.687 கிலோ கேட்டமின் (போதைப் பொருள் பயன்பாட்டுக்காக) மலேசியாவிற்கு கடத்தியதற்காக ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் மற்றும் சிலர், போதைப் பொருள்கள் மற்றும் மனநோய் மருந்துகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இடம்பெற்ற ஜூகோ ஓவர்சீஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜாபர் சாதிக் மற்றும் ஒரு பிரபல நபர், தமிழகத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஜாபர் சாதிக் தமிழகத்தை தங்கள் இருப்பிடமாக மாற்றி, தங்கள் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த திமுக தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜாபர் போதைப்பொருள் கடத்தலுக்காகக் கைது செய்யப்பட்டதையும் 2019 ஆண்டு, போதைப்பொருள் கடத்தி, கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்ததையும் பற்றித் தெரியாத திமுக அறிவிலிகளைப் போல, தமிழக மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். முதல்வர் ஸ்டாலின் இவற்றிற்கு பதிலளிக்க வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.