போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக்கின் நண்பர் அதிரடி கைது!

கடந்த மாதம் டெல்லியில் போதைப்பொருட்கள் சிக்கியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தலைவனாக செயல்பட்டு இருப்பது தெரியவந்தது.

அவர் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக பிரிவு துணை அமைப்பாளராகவும் இருந்தார். போதைப்பொருள் விவகாரத்தில் அவரது பெயர் இருப்பதை அறிந்த முதல்வர் ஸ்டாலின் பயத்தில் உடனடியாக ஜாபர் சாதிக்கை கட்சியில் இருந்து நீக்கினார்.

ஜாபர் சாதிக் இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 500 கிலோ ‘சூடோபெட்ரின்’ என்ற போதைப்பொருள் தயாரிப்பு வேதிப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தி இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாபர் சாதிக்குக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது. அவர் தலைமறைவானார். அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. வீட்டை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதற்கிடையே, தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜாபர் சாதிக் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறைக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன், சலீம் ஆகியோருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை நேற்று (மார்ச் 12) மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா என்ற சதானந்தம் என்பவரை சென்னையில் வைத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்த சதாவை போலீசார் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். இவர் ஜாபர் சாதிக்கின் தொழில் ரீதியான நடவடிக்கைகளை கண்காணித்து வந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

சதாவிடம் விசாரணை மேற்கொண்டால் இந்த போதைப்பொருள் வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 5 ஆவதாக சதா கைது செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் திமுகவின் முக்கியப்புள்ளிகள் மற்றும் சினிமாத்துறையில் உள்ளவர்கள் பலர் சிக்க வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொருத்தரையும் விடாமல் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. போதைப் பொருளால் இளைஞர்கள், பள்ளி சிறார்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே போதை கடத்தல் கும்பலை சிறையில் போட்டால் மட்டுமே வருங்காலத் தலைமுறையை காப்பாற்ற முடியும் என்பது ஒட்டு மொத்த மக்களின் எண்ணமாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top