நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை (13.03.2024) தேசிய தலைமை வெளியிட்டது. இதில் 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மும்பை வடக்கு தொகுதியில் பியூஷ் கோயல், ஹமிர்பூரில் அனுராக் தாக்கூர் களமிறங்குகின்றனர்.
கர்நாடகா, மத்தியப்பிரதேசம், அரியானா, இமாச்சலப்பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து 72 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியிலும், பியூஷ் கோயல் மும்பை வடக்கு தொகுதியிலும், அனுராக் தாக்கூர் ஹமிர்பூர் தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் கர்ணால் தொகுதியிலும், முன்னாள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஹவேரி தொகுதியிலும், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா ஷிமோகா தொகுதியிலும் வரும் நாடாளுமன்றத் தேர்லில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக இளைஞரணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா போட்டியிட உள்ளார்.
கடந்த 2ஆம் தேதி வெளியான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட 195 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்ற நிலையில், நேற்று (மார்ச் 13) 72 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் என 267 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க., தேசியத் தலைமை வெளியிட்டுள்ளது.