வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என தெலுங்கானா மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 15) நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
மோடியின் குடும்பத்தில் 140 கோடி இந்தியர்கள் உள்ளனர். கடந்த 23 ஆண்டுகளாக முன்பு முதல்வராகவும், இப்போது பிரதமராகவும் நான் பணியாற்ற மக்கள் வாய்ப்பளித்து உள்ளனர். நான் எனக்காக எந்த நாளையும் பயன்படுத்தவில்லை. நான் இரவு பகலாக உழைத்து வருகிறேன். 140 கோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன்.
25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளின் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா? காங்கிரசும், பி.ஆர்.எஸ்.,சும் இணைந்து தெலுங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக் கனவை தகர்த்துவிட்டன.
மூன்றாவது முறையாக மோடியை பிரதமர் ஆக்க தெலுங்கானா மக்கள் முடிவு செய்துள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். தெலுங்கானா மாநிலத்தை காங்கிரஸ் 5 ஆண்டுகளில் அழித்து விடும்.தெலுங்கானா மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.