நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தேர்தலை எதிர்கொள்கிறது. பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 10 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை நேற்று அறிவித்தது பாமக. காஞ்சிபுரம் தொகுதியை தவிர மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
ஏற்கனவே தருமபுரி தொகுதியில் செளமியா அன்புமணிபோட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் நேற்று காலை வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில், தருமபுரி தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதால் சௌமியா அன்புமணிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிந்தது.
இந்த நிலையில், நேற்று மாலை தருமபுரி தொகுதி வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டு அவருக்கு பதில் செளமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தருமபுரி திமுக எம்.பி.யான செந்தில்குமார் பாமக வேட்பாளர் மாற்றப்பட்டது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், இல்ல தெரியாம தான் கேட்கிறேன், தர்மபுரி மக்களை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு. தருமபுரியில் வாழும் பாட்டாளி சொந்தங்களே உங்களுக்கும் சேர்த்து தான் என் குரல் என குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்த பாமக தொண்டர்களும் நெட்டிசன்களும் செந்தில்குமாருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். திமுக குடும்ப அரசியலை விட, பாமகவில் பெரிதாக வாரிசு அரசியல் இல்லை என்றும் பதிலடி கொடுத்து வந்தனர். மேலும் ஓட்டுபோட்ட தருமபுரி மக்களுக்கு எதுவுமே செய்யாமல் சமூக வலைத்தளத்திலேயே கடந்த 5 வருடமாக காலத்தை தள்ளிவிட்டீர்கள். அதான் இந்த முறை திமுக உங்களுக்கு சீட் தரவில்லையா எனவும் கடுமையாக பாமகவினர் விமர்சித்தனர். இதனால் பதறிப்போன செந்தில்குமார் தனது பதிவை டெலிட் செய்துவிட்டு கப்சிப் என்று ஆனார்.