கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் கட்டுக்கதை அம்பலமாகியுள்ளது: கோவை செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேச்சு!

கச்சத்தீவு விவகாரத்தில் இத்தனை ஆண்டுகாலமாக பொய் பேசி வந்த திமுகவின் கட்டுக்கதை அம்பலமாகியுள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

இன்று காலையில் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் முழுமையாக கச்சத்தீவை பற்றி என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கினார். அதன் தொடர்ச்சியாக நமது பாரதிய ஜனதா கட்சி, குறிப்பாக திமுகவிற்கு சில கேள்விகளை வைத்துள்ளோம்.

இத்தனை காலமாக திமுகவின் தலைவர்கள் எல்லாம் தமிழகத்தில் சொன்ன கட்டுக்கதை, கச்சத்தீவை காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்துட்டாங்க. எங்களின் போராட்டத்தையும் தாண்டி கொடுத்துட்டாங்க! எங்களை கேட்காமல் கொடுத்துட்டாங்க. அதனால் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம் .இதற்காக அன்றைய தினம் பாராளுமன்றத்தில் வெளிநடப்பு கூட செய்தார்கள்.

அப்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த செழியன் ஐயா, பாராளுமன்றத்தில் கச்சத்தீவை பற்றி தெள்ளத்தெளிவாக என்ன பேசியிருந்தார் என்றால், அப்பொழுது முதலமைச்சர் கருணாநிதியிடம் யாருமே கேட்கவில்லை. எங்களிடமும் அனுமதி கேட்கவில்லை, எங்களுக்கு தகவல் கூட சொல்லவில்லை. காங்கிரஸ் அரசு அவர்களே கச்சத்தீவை கொடுத்துவிட்டார்கள். இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கலாட்டா செய்து அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்தவரை பாராளுமன்றத்தில் பேசக்கூட திமுக எம்.பி.க்கள் விடவில்லை. குறிப்பாக செழியன் அவர்கள் விடவில்லை.

காரணம் தமிழக மக்களை வஞ்சித்திருக்கிறார்கள், ஏமாற்றியிருக்கின்றார்கள். ஆனால் இன்றைக்கு கச்சத்தீவு சம்பந்தமாக ஆர்.டி.ஐ. மூலமாக பெறப்பட்டுள்ள ஆவணங்களை படிக்கும்பொழுது மிகத்தெளிவாக அன்றைக்கு நமது வெளியுறவுத்துறை செயலாளர் கெவல்சிங் அவர்கள் கருணாநிதியை 19 ஜூன் 1974 காலை சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றுள்ளது. அந்த சந்திப்பு முடிந்த பின்பு பேசியவைகளை டைப்பிங் செய்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஒரு பதிவு அனுப்பப்பட்டுள்ளது.

கச்சத்தீவை கொடுப்பதற்கு முன்பு வெளியுறவுத்துறை செயலாளர் கெவல்சிங் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து அனுமதியை பெற்று அதன் பின்னர் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெள்ளத்தெளிவாக இந்த ஆவணம் நமக்கு காட்டுகிறது.

கிட்டத்திட்ட ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்தின் பேச்சுக்கள் 9 பக்கங்களில் டைப் செய்யப்பட்டுள்ளது. இதனை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த ஆவணங்களை வெளியிடுகிறோம். நேற்று பேசியது, இன்று பேசிய அனைத்து ஆவணங்களும் பத்திரிகையாளர்களுக்கு வழங்குகிறோம்.

இதில் மிக முக்கியமானது அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி கேட்கிறார்கள்? இந்த கச்சத்தீவு பிரச்னையை இரண்டு வருடம் தள்ளிபோட முடியுமா? அதாவது இன்றைக்கு வேண்டாம் இரண்டு ஆண்டு கழித்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வாருங்கள் என்று சொல்கிறார். கச்சத்தீவை கொடுப்பதில் கருணாநிதியின் முடிவும் இருந்துள்ளது. எனவே அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
எனவே பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கேட்கக்கூடிய முதல் கேள்வி? காங்கிரசும், திமுகவும் 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை திட்டமிட்டு சதி செய்துதான் இலங்கைக்கு கொடுத்துள்ளனர். இதில் திமுகவின் முழு பங்களிப்பு உள்ளது.

இன்றைக்கு நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது போல 21 முறை தமிழகத்தின் முதலமைச்சர் நாடகத்திற்காக கடிதம் எழுதுகிறார். கச்சத்தீவை மீட்டுத்தாருங்கள் என்று! அன்றைக்கு முதலமைச்சர் கருணாநிதி கச்சத்தீவை கொடுப்பதற்கு சம்மதம் இல்லை என்று சொல்லியிருந்தால் கச்சத்தீவை மத்திய அரசு கொடுப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் அன்றைக்கு அரசியல் காரணங்களுக்காக கருணாநிதி சம்மதம் தெரிவித்துள்ளார். இதை எல்லாம் மறந்து 21 முறை ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது எங்களின் முதல் கேள்வி ஆகும்.

 இன்று,ராமநாதபுரம் பகுதியில் கச்சத்தீவை கொடுத்த பின்னர் இந்தியாவின் எல்லை சுருங்கியுள்ளது. அதற்கு காரணம் , மாபெரும் துரோகம் செய்த  காங்கிரசும், திமுகவும்தான்.

இரண்டாவது கேள்வி? காங்கிரஸ், திமுக இருவரும் எப்பொழுது எல்லாம் இணைகிறார்களா அப்பொழுதும் எல்லாம் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதி அண்டை நாடுகளுக்கு கொடுக்கப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தனியாக இருந்தபோது ஹட்சாயின், அருணாச்சலில் ஒரு பகுதியை கொடுத்துள்ளனர். இதன் பின்னர் திமுக இணைந்தபோது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துள்ளனர்.

இந்தியாவின் இறையாண்மை மீது திமுகவிற்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லை 1969ல் பேசினதையே திரும்ப பேசப்போகிறார்களா? என்பதை திமுக மீண்டும் தெளிவுப்படுத்த வேண்டும்.

மூன்றாவது கேள்வி? இன்றைக்கு ஆழ்கடலில் நடக்கும் எல்லாம் பிரச்னைகளுக்கும் காரணம் திமுக மட்டுமே. வேறு யாரும் இல்லை. 2014க்கு முன்பு நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும் திமுகதான் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும். 2014க்கு பிறகு நடைபெறும் பிரச்சனைகளுக்கும் திமுகதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.  

இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top