லவ் ஜிகாத், நில ஜிகாத்.. இப்போது ஓட்டு ஜிகாத் நடத்தி இ.ண்.டி. கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி பிரமுகர் பேசியதை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் மீது கடுமையாக தாக்கி பேசினார்.
குஜராத்தில் வருகின்ற 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்தில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சபர்காந்தா மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 2ம் தேதி பேசுகையில், ஓட்டு ஜிகாத்தை குறிப்பிட்டு காங்கிரஸ் மற்றும் இ.ண்.டி. கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
“இ.ண்.டி. கூட்டணியின் தலைவர் ஒருவர் முஸ்லிம் மக்கள் ஓட்டு ஜிகாத் நடத்தி இ.ண்.டி. கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனப் பேசுகிறார். லவ் ஜிகாத், நில ஜிகாத்.. இப்போது ஓட்டு ஜிகாத் வந்துள்ளனர். எனவே படித்த குடும்பத்திலிருந்து வந்தவர் பேசியது, மதரஸாவிலிருந்து வெளிவரும் குழந்தை பேசியது அல்ல. அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுகூடி வாக்களிக்க வேண்டும் என்று இ.ண்.டி. கூட்டணி கூறுகிறது.
இ.ண்.டி. கூட்டணியினர் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் அவமதித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தார்களா? ஒருபுறம் இண்டி கூட்டணியினர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களின் இடஒதுக்கீட்டை பறிக்க நினைக்கும் சூழலில், மறுபுறம் ஓட்டு ஜிகாத்துக்கான முன்னெடுப்பை எடுத்துள்ளார்கள்.” எனத் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதியில் இ.ண்.டி. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக ‘வாக்கு ஜிஹாத்’ நடத்தி அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை சமாஜவாதி கட்சிப் பிரமுகரான மரியா ஆலம் பேசியது சர்ச்சையானது. மரியா ஆலம், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் உறவினராவார்.