70 ஆண்டுகளாக கையில் வெடிகுண்டுகளுடன் நமக்கு பாகிஸ்தான் தொல்லை கொடுத்து வந்தது. தற்போது பாகிஸ்தான் கையில் பிச்சைப்பாத்திரம் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.
ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் இன்று (மே 18) நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ராணுவத்தில் ஊழல்களை செய்து நமது வீரர்களை காங்கிரஸ் ஏமாற்றி வந்தது. நமது படைகளை காங்கிரஸ் பலவீனப்படுத்தியது. ஆயுதங்கள் கொள்முதல் மூலம் காங்கிரஸ் சம்பாதித்தது. வீரர்களின் தேவைகளை கண்டுகொள்ளவில்லை. 70 ஆண்டுகளாக கையில் வெடிகுண்டுகளுடன் நமக்கு பாகிஸ்தான் தொல்லை கொடுத்து வந்தது. தற்போது பாகிஸ்தான் கையில் பிச்சைப் பாத்திரம் உள்ளது.
500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அவமதிக்கும் வகையில் பேசுகிறார்கள். உங்கள் அனைவருக்கும் நான் உத்தரவாதம் தருகிறேன்.
உங்கள் கனவுகளை நிறைவேற்றுவது எனது நோக்கம். ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு பேரும் இந்தியாவின் தூண்கள். இந்த தூண்கள் அனைத்தையும் பலப்படுத்த நான் விரும்புகிறேன். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை பா.ஜ.க., அரசு ரத்து செய்தது. காஷ்மீர் இப்போது வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.
ஜூன் 4ம் தேதிக்கு இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ளன. இண்டி கூட்டணியினர், நாட்டுக்கு எதிராக என்னென்ன தந்திரங்களைச் செய்திருந்தாலும், அவர்கள் தேர்தல் களத்தில் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
ஹரியானா தேசபக்தியைக் கொண்ட மாநிலம். காங்கிரசுக்கு வாக்குகள் மட்டுமே முக்கியம். காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகளில் 7.5 லட்சம் கோடி மதிப்பிலான தானியங்கள் மட்டுமே, நாட்டின் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. பா.ஜ.க., ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து 20 லட்சம் கோடி ரூபாய்க்கு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.