கர்நாடகாவில் பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடாவை அம்மாநில போலீசார் கைது செய்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜேடிஎஸ் மாநிலத் தலைவரான எச்.டி.குமாரசாமி ஆகியோர் மீது அவதூறு கருத்துக்களை பரப்ப கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ரூ.100 கோடி பேரம் பேசியதாக தேவராஜ்கவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் மக்களவைத் தொகுதி மஜத எம்.பியாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு அமைப்பை அம்மாநில அரசு அமைத்திருக்கிறது.
புலனாய்வு அமைப்பு சமீபத்தில் பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடாவை பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் கைது செய்தது.
இப்படி இருக்கையில், பிரதமர் மோடி, ஜேடிஎஸ் மாநிலத் தலைவரான எச்.டி.குமாரசாமி ஆகியோர்மீது அவதூறு கருத்துக்களை பரப்ப கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தனக்கு ரூ.100 கோடி கொடுத்ததாக தேவராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று தேவராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் வாகனத்திலிருந்து பேட்டியளித்த அவர், இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
‘‘இந்த விவகாரத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் எனக்கு முன்பே ரூ.5 கோடியை கொடுத்திருந்தார். அவர்கள் பிரதமர் மோடிக்கும், எச்.டி.குமாரசாமிக்கும், பா.ஜ.க.வுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பெரிய அளவில் திட்டமிட்டனர். எனக்கு ரூ.100 கோடி வழங்குவதாக கூறினர். முதல்கட்டமாக பவுரிங் கிளப்பில் உள்ள ரூம் எண். 110க்கு ரூ.5 கோடியை முன்பணமாக அனுப்பினார்கள். இது தொடர்பாக பேரம் பேச, சன்னராயப்பட்டணாவைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் கோபாலசாமி அனுப்பப்பட்டார்.
ஆனால், நான் அவர்களுடைய ஆஃபரை மறுத்துவிட்டேன். எனவே என் மீது போலியான வழக்கு பதிவு செய்யப்பட்டு நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். என் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. நான்கு நாட்கள் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் என்னிடமிருந்து எதையும் பெறவில்லை.
சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் இந்த விவகாரம் தொடர்பாக சிவகுமாரை நான் அம்பலப்படுத்துவேன். கர்நாடகாவில் விரைவில் காங்கிரஸ் அரசு கவிழும் என்றார்.