முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக, புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டம், மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட தகவல், ஜனவரி மாதமே தெரியவந்த போதிலும் திமுக அரசால் திட்டமிட்டே மூடி மறைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி தகவலை வெளியிட அதிகாரிகளுக்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தடை போட்ட தகவல் அம்பலமாகியுள்ளது.
கேரள மாநில எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணை, 999 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது.
இந்த அணை வாயிலாக, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
அணை பலவீனமாக இருப்பதாக கேரள கம்யூனிஸ்ட் அரசு தொடர்ந்து பிரச்னை செய்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் அணையின் உறுதி தன்மையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அணையின் கீழ் பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்தி முழு கொள்ளளவு நீர் தேக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி 10.5 டி.எம்.சி., கொள்ளளவு உடைய அணையில், 7.66 டி.எம்.சி., நீர் மட்டுமே தேக்கப்படுகிறது.
அணையில் முழு கொள்ளளவுக்கு நீரை சேமிக்க முடியாததால், ஐந்து மாவட்டங்களின் பாசன பரப்பை அதிகரிப்பதிலும் குடிநீர் வழங்கும் பணியை விரிவாக்கம் செய்வதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.
அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள கேரள வனத்துறை அனுமதி வழங்காமல், பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது. அணையின் கீழ் பகுதியில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்றவும் அனுமதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அணையை இடித்து விட்டு, 336 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு, அணை கட்டுமானம் தொடர்பான வரைவு அறிக்கையை தயாரித்து கடந்த ஜனவரி மாதம் கேரள நீர்வளத்துறை அனுப்பியுள்ளது.
இதை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் துறை, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஒப்புதல் பெறுவதற்கு கடந்த 4ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிற்கு அனுப்பியுள்ளது. இதையடுத்து 11 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் வரும் 28ம் தேதி அணை கட்டுமானம் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இத்தகவல் தற்போது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரங்கள் அனைத்தும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செயலர் சந்தீப் சக்சேனா, பன்மாநில நதிகள் பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனவரி மாதமே கிடைத்துள்ளன.
அப்போது மக்களவைத் தேர்தல் நேரம் என்பதால் கூட்டணியில் சிக்கல் வரக்கூடாது என்பதற்காகவும் எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்காகவும், இத்தகவலை திமுக மூடி மறைத்துள்ளது. இந்த விஷயத்தை வெளியில் வராமல் தடுக்க, அதிகாரிகளுக்கு திமுக அமைச்சர் துரைமுருகன் ரகசியத் தடையுத்தரவு போட்டுள்ளார்.
அப்போதே இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி இருந்தால், மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிற்கு, இப்பிரச்னை சென்றிருக்காது. மத்திய சுற்றுச்சூழல் துறையுடன் பிரச்னை நின்றிருக்கும். தற்போது, நீதிமன்றத்தை அணுக வேண்டிய நெருக்கடியான நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டு உள்ளது.
அமைச்சர் உத்தரவிட்டு இருந்தாலும், தலைமை செயலர் கவனத்திற்கு இப்பிரச்னையை துறையின் செயலர் சந்தீப் சக்சேனா கொண்டு சென்றிருக்க வேண்டும் என்கிறது ஐ.ஏ.எஸ்., வட்டாரம்.
இந்த வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
தேர்தல் அறிவிப்புக்கு முன், மேகதாது அணை பிரச்னை வந்த போது, காவிரி ஆணைய கூட்டத்தில், மத்திய நீர்வளத்துறை கவனத்திற்கு, அதை கொண்டு செல்வதற்கான தீர்மானம், கர்நாடகாவின் அழுத்தத்தால் நிறைவேற்றப்பட்டது.
அந்த விஷயத்தில், சந்தீப் சக்சேனா சரிவர செயல்பட தவறி விட்டதாக புகார் எழுந்தது. பின்னர் தனக்கு தெரியாமல் இது நடந்ததாக, அரசிடம் விளக்கம் அளித்து சமாளித்தார்.
அப்போது, குவாரிகள், மணல் கான்ட்ராக்டர்கள், அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறை ரெய்டு என, தொடர்ச்சியாக, நீர்வளத்துறையை சுற்றி பிரச்னை எழுந்தது.
அதனால் மக்களவைத் தேர்தல் நேரத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்னை கிளம்பினால், அரசுக்கு பெரிய நெருக்கடி ஏற்படும் என்பதால், பிரச்னையை மூடி மறைத்துள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.