தேர்தல் முடிந்த உடன் ஒவ்வொரு வீடுகளிலும் ரூ.15,000 வசூலிக்கும் திமுக அரசு: அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

தேர்தல் முடிந்து உடன் மின் நுகர்வோரிடமிருந்து கூடுதல் காப்புத்தொகையாக ரூ.15,000 வசூலிக்க திமுக அரசு முடிவு செய்திருப்பதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு அடுத்த மாதம் முதல் மின்சார நுகர்வோரிடமிருந்து கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள்  கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க மின்சார வாரியம் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

அனைத்து நுகர்வோரும் மே மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான ஓராண்டில் பயன்படுத்திய மின் கட்டணத்தில் மாத சராசரி கணக்கிடப்பட்டு, 3 மாதங்களுக்கான தொகை புதிய காப்புத் தொகையாக கணக்கிடப்படும்.  ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள காப்புத்தொகைக்கும், புதிய காப்புத்தொகைக்கும் இடையிலான கட்டணத்தை கூடுதல் காப்புத்தொகையாக நுகர்வோர் செலுத்த வேண்டும்.

2022-ஆம் ஆண்டு மின்சாரக் கட்டணம் 52% வரை உயர்த்தப்பட்டது. அதனால், அனைத்து வகையான மின் இணைப்புகளுக்கும் மின் கட்டணம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதன்படி பார்த்தால் வீடுகளுக்கான மின் இணைப்புக்கு ரூ.15,000 வரை கூடுதல் காப்புத்தொகை செலுத்த வேண்டியிருக்கும்  என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தையே செலுத்த முடியாமல் மக்கள் தவிக்கும் நிலையில் கூடுதல் காப்புத்தொகையை  ஏழை மற்றும் நடுத்தர மக்களால்  செலுத்த முடியாது. கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க திமுக அரசு திட்டமிட்டிருந்த நிலையில் பா.ம.க.வின் எதிர்ப்பால் தான் அது கைவிடப்பட்டது. இப்போதும் கூடுதல் காப்புத்தொகை வசூலிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜூலை மாதம் முதல் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 6% வரை உயர்த்தப்படவுள்ளது. அதற்கு முன்பாக கூடுதல் காப்புத்தொகை செலுத்த வேண்டும் என்பது மனிதநேயமற்ற முடிவு ஆகும். மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதன் பின் ஆண்டுக்கு ஒருமுறை மின்சாரக்கட்டணத்தையும், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை காப்புத் தொகையையும் உயர்த்துகிறது. திமுக அரசின் இந்த மக்கள்விரோத செயலுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top